பாடன் ரூஜ் பகுதியில் சுட்டு கொல்லப்பட்ட காவலரின் உணர்சிகர முகபுத்தக பதிவு பெரும்பாலான மக்களால் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பாடன் ரூஜ் பகுதியில் நேற்று கருப்பினத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர். இதில் கொல்லப்பட்ட மூத்த காவல் அதிகாரி மான்ட்ரெல் ஜாக்சன் ஒரு கருப்பினத்தவர், சுட்டுக்கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் பதிவிட்ட பேஸ்புக் பதிவு அனைவரது மனதையும் கலங்கச் செய்துள்ளது.
சமீபத்தில் பாடன் ரூஜ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை அமெரிக்க அதிகாரி சுட்டுக் கொன்றார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது.
இது குறித்து மான்ட்ரெல் ஜாக்சனின் பேஸ்புக் பதிவில், ”நான் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன். கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் இந்நகரத்தை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்நகரமும் என்னை நேசிக்கிறதா என தெரியவில்லை. எனது குறுகிய வாழ்க்கையில் நான் நிறைய கற்றிருக்கிறேன். ஆனால், இந்த கடைசி மூன்று நாட்கள் என்னை சோதனைக்கு உட்படுத்திவிட்டது.
வெறுப்பால் உங்கள் இதயங்களை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் அடிமனதிலிருந்து என்னை வெறுத்துவிடாதீர்கள். இன்னும் சில தினங்களில் இந்நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.