சுற்றுலாத் தலமான ஹேத்தியனின் புறாக்கள் வீதி

Webdunia
செவ்வாய், 1 டிசம்பர் 2020 (22:51 IST)
சுற்றுலா என்பது சுக அனுபவம்,  அதிலும் ஊர் சுற்றுவதையே வேலையாக வாய்க்கப்பெற்றவர்கள் அதிர்ஷடசாலி என்றுதான் சொல்ல வேண்டும்.  உலகம் சுற்றும் வாலிபனாக உலா வர யாருக்குத் தான் ஆசை இருக்காது.  எந்த நேரமும் வானத்திலேயேதான் பறந்துப் கொண்டுஇருப்பார் என்று சொல்லும் அளவுக்கு உலக நாடுகளை சுற்றி தங்கள் அனுபவங்களை பெருக்கிக் கொண்டவர்களும் ஏராளாம். 
 
அந்த வகையில் சுற்றுலா செல்லுவதற்கான பல நாடுகளின் பட்டியலில் சீனாவும் ஒன்று.  சீனாவின் மிகப்பெரிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், குவாங்சோ, ஹெய்நான் போன்ற நகரங்கள் மட்டும் சுற்றுலாவுக்கு சிறப்பானது என்று சொல்லிவிடமுடியாது. இன்னும் எத்தனையோ நகரங்கள் இருக்கின்றன். அவற்றில் ஒன்தான் சீனாவின் மிகப்பெரிய மாகாணமான, சின்சியாங். ஆய்வுப் பயணத்திற்ககான ஏற்ற இடம் என்று சொல்லலாம்.  இம்மாகானத்தின் தலைநகரான உரும்சி முக்கியமாக சின்சியாங்கில் உள்ள பிற இடங்களுக்கான நுழைவாயிலாக உள்ளது. 
 
உரும்சியில் இருந்து சுமார் 120 கி.மீ. சின்ஜியாங்கின் மிக அழகான ஏரிகளில் ஒன்றான ஹெவன் ஏரிக்கு செல்லலாம். முக்கியமான வர்த்தக மற்றும் கலாச்சார மையமாக விளங்கும்  சின்ஜியாங் உய்குர் தன்னாட்சி பிரதேசத்தின்  தென்மேற்கில் அமைந்துள்ள ஹேத்தியன் நகரம், வரலாறு புகழ்மிக்க பட்டுச் சாலையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது.  சின்சியாங் உய்குர் தன்னாட்சி பகுதி, ஒரு காலத்தில் மக்கள் பறவைகளை வர்த்தகம் செய்யும் இடமாக இருந்தது.  குறிப்பாக ஹேத்தியன் நகரின் புறாக்களின் வீதி என்று அழைக்கப்பட்ட பகுதி மறு சீரமைக்கப்பட்டு தற்போது சுற்றுலா காட்சித் தளமாக மாறியுள்ளது. 
 
சுமார் 317 மில்லியன் யுவான் முதலீட்டில்,  அதன் தனித்துவமான பண்புகள் மற்றும் கலாச்சாரத்துடன் புதுப்பிக்கப்பட்டு தற்போது  சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் காட்சித்தளமாகியுள்ளது. 
 
பாரம்பரியம் மாறாமல் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள கட்டங்கள் காண்போரின் கண்கவரும் வகையில் உள்ளன. கீழே கடைகள், மேலே குடியிருப்பு வீடுகள் என்ற ரீதியில் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான விடுதி நடத்தி வரும் இமின் முகமத் என்பவரை சந்தித்த போது அவர் கூறியதாவது:
 
 30 ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள், 2 மகள்கள், 12 பேரக்குழந்தைகள்,  பல ஆண்டுகளாக பழைய கட்டடத்தில் புறாக்கூடு போன்று இருந்த சாலையில் வசித்து வந்தோம்,  4 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இதை சீரமைத்து உய்கூர் இன பாணியில் நவீன கட்டங்களை கட்டி அமைத்துள்ளது.  
 

2017 ஆம் ஆண்டில் 7 லட்சம் யுவான் அரசு மானியத்தில்  மூன்று விடுதிகள் கட்டினோம். மாதம் தோறும் சுமார் 50 சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் அப்பகுதியில்  உள்ள பள்ளி கல்வி வசதி பற்றி கேட்ட  போது அரசு அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்குவதாகவும், உய்கூர் இன மொழியும் சீன மொழியும் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதாக கூறினார்.
 
பாரம்பரியம் மாறாமல் நவீன முறையில் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கட்டடத்திலும், உய்கூர் இன கம்பள ஓவியம் சுவர்களில் தொங்கவிடப்பட்டுள்ளது. எளிமையாகவும் கலைநயத்துடனும் அமைக்கப்பட்டுள்ள இந்த வீதிகளின் நடுவே காட்சி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் உய்கூர் இன கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்து பாரம்பரிய பாடல்களைப் பாடி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கின்றனர்.  மேலும் வீதிகளில் உலவும் புறாக்களுக்கு நாம் உணவளித்தால் அவை நம் தோள்களிலும் கைகளிலும் அமர்ந்து நம்மை மகிழ்ச்சியூட்டுகின்றன. இனிமையான சுற்றுலா அனுபவத்தை தரக்கூடியதாக உள்ளது இந்த இடம் என்றால் மிகையில்லை. 
 
அது மட்டுமல்லாமல் ஹேத்தியனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் உலகப் புகழ் பெற்ற தக்லா மாகன் பாலைவனத்திற்கு செல்லாமல் இருக்க மாட்டார்கள். உள்ளூர் அரசால் சிறப்பாக நிர்வகிக்கப்படும் இப்பாலைவனம் சீனாவின் மிகப்பெரிய பாலைவனமாகும், இது சிஞ்சியாங் மாகாணத்தில் உள்ள தரிம் என்ற மிகப்பெரிய படுகையின் நடுவில் அமைந்துள்ளது. இது 33, 700 சதுர கிலோமீட்டர் (13,000 சதுர மைல்களுக்கு மேல்) பரப்பளவைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய மணல் பாலைவனமாகும்.
 
இந்த பெரிய தக்லா மாகன் பாலைவனத்தில் தொடர்ச்சியான மணல் திட்டுகள் பொதுவாக 100 மீட்டர் உயரத்திற்கு அதிகமாக இருக்கும். காற்றின் காரணமாக, மணல் திட்டுகள் எப்போதும் முன்னோக்கி நகர்கின்றன, ஒவ்வொரு ஆண்டும் அவை சுமார் 150 மீட்டர் நகரும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன, கடந்த 50 ஆண்டுகளாக, மணல் புயல்களின் அத்துமீறல்களைக் குறைக்க மரங்களை நடுவதற்கு சீன அரசு பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. நிபுணர்களின் உதவியுடன், உள்ளூர் மக்கள் பல்வகை-இலைகள் கொண்ட பாப்லர்கள், ரோஜா-வில்லோக்கள், மாதுளை மரங்கள், மல்பெர்ரிகளை நட்டு, காற்றழுத்த முறைகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
 
சில இடங்களில், மக்கள் சோளம் கூட பயிரிடுகிறார்கள். இதனால் உள்ளூர் மக்களின் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது. இப்போது பாலைவனத்தின் உட்பகுதியில்  80 க்கும் மேற்பட்ட பறவைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.  மேலும் மழைப்பொழிவு அதிகரித்து வருகிறது. மணல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன அரசால்  அங்கு சாலைகள் போடப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாப் பயணிகள் பாலைவனத்தில் நடந்து செல்லும் வகையில் மரப்பலகைகளால் ஆன நடைபதை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ளன. பயணிகளின் சவாரிக்காக ஒட்டகங்கள், குதிரைகள், மற்றும் கார் வசதிகளும் உள்ளன. அதோடு மட்டுமின்றி பாலைவனத்தில் உள்ளே நீண்ட தூர நடந்து சென்றால்  அங்கு சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு விடுதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 
 
பயணிகளுக்கான விடுதி வசதியோடு, உணவு வசதிக் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிக்கனா அரங்கு போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பாலைவனத்தில் இத்தனை வசதிகள் செய்யமுடியுமா என்ற வியப்போடு நடந்து செல்லும் போது மேலும் நமக்கு அங்கே வியப்பையூட்டும் இன்னொரு விசயம் குப்பைகளை முறையாக குப்பைத் தொட்டியில் போடுவதற்காக 10 மீட்டர் இடைவெளியில்  நிறைய குப்பைத் தொட்டிகளும் அமைக்கப்பட்டருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்