பாகிஸ்தானில் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்ற 8 மாத கர்ப்பிணி மகளை அவரது தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று கவுரவக் கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பட்ரன்வாலியைச் சேர்ந்த முகாதாஸ் என்ற இளம்பெண் அதே பகுதியைச் தவுபீக் என்பவரை காதலித்து, பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடும் எதிர்ப்புக்கு இடையே ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டனர். இதனால், தங்கள் குடும்பத்தின் கவுரவம் போய்விட்டதாக கருதிய முகாதாசின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்தனர்.
இந்நிலையில், 8 மாத கர்ப்பமாக இருந்த முகாதாசை (வயது 22) மன்னித்து ஏற்றுக்கொள்வதாக அவரது தாய் அம்னா சமீபத்தில் கூறியுள்ளார். நேற்று மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றபோது அங்கு சென்ற அம்மா, மகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
ஆனால், அங்கு சென்றதும் முகாதாசை குடும்பத்தினர் அனைவரும் கடுமையாக சித்ரவதை செய்துள்ளனர். அப்போதும் ஆத்திரம் தணியாத அவர்கள், அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
பாகிஸ்தானில் சமீபகாலமாக கவுரவக் கொலைகள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 1100 பெண்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.