உக்ரைன் மீது கை வைத்தால்.. இன்னொரு உலகப்போர்? – ஜோ பைடன் எச்சரிக்கை!

Webdunia
வியாழன், 27 ஜனவரி 2022 (08:49 IST)
உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க முயற்சித்தால் அது இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் பெரிய போராக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

சோவியத் யூனியன் சிதறியபோது தனி நாடாக உருவானது உக்ரைன். உக்ரைனில் கடந்த 2013 வரை ரஷ்யாவின் ஆதரவு பெற்ற ஜனாதிபதி விக்டர் யானுகோவிச் பதவி வகித்து வந்தார். அவருக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய ஆதரவு கொண்ட எதிர்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட அதனால் அவர் தப்பித்து ரஷ்யாவில் தஞ்சமடைந்தார். பின்னர் நடந்த ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் போரினால் உக்ரைனின் டோனஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகள் ரஷ்ய ஆதரவாளர்கள் வசமானது.

அதை தொடர்ந்து உக்ரைனை கைப்பற்றுவதில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உக்ரைனில் ரஷ்ய ஆதரவு அரசை அமைக்க ரஷ்யா உக்ரைன் எல்லையில் படைகளை குவித்து வருகிறது.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் நிச்சயமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும். ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தால் அது இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மிகப்பெரும் போராக இருக்கும். இது நடந்தால் ரஷ்யா மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும்” என எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்