இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வரும் நிலையில் அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக பாலஸ்தீனத்தின் காசா முனையை கட்டுப்படுத்தி வரும் ஹமாஸ் அமைப்பிற்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் எழுந்தது.
இதனால் இரு தரப்பினரும் பயங்கர ஏவுகணைகள் உள்ளிட்டவற்றால் தாக்குதல் நடத்தியதில் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை காசா முனையில் பெண்கள், குழந்தைகள் உட்பட 277 பேரும், மேற்கு கரையில் 24 பேரும், இஸ்ரேலில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் போரை நிறுத்த இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படாத சூழல் இருந்து வந்தது. தற்போது பரஸ்பர போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டுள்ளதாக ஹமாஸ் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் இந்த போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.