அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வாகியுள்ளார். அவர் வரும் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக முறைப்படி பதவியேற்க உள்ளார். இந்நிலையில் பெண்களை பற்றி டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மீது வீசப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளும் முக்கியமானவை. பெண்கள் தொடர்பாக எப்பொழுதுமே சர்ச்சையாக பேசி வரும் டொனால்ட் டிரம்ப் இதற்கு முன்னர் பேசிய 10 சர்ச்சை கருத்துக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. அமெரிக்காவில் உள்ள Huffington என்ற பத்திரிகை நிறுவனரான அரியன்னா என்பவரை பற்றி பேசிய டிரம்ப், அவரின் உள்ளுறுப்புகளும் வெளி உறுப்புகளும் பார்க்க கேவலமாக உள்ளது. அதனால் தான் அவரது கணவர் அவரை விட்டுவிட்டு வேறொரு ஆணை தேடி சென்றார் என்பதை புரிய முடிகிறது என்றார்.
2. நிகழ்ச்சி ஒன்றில் தன்னிடம் கடுமையான கேள்விகளை எழுப்பிய ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் மெகின் கெல்லி என்ற பெண்ணை பற்றி மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், மெகின் கெல்லி அப்போது மாதவிடாய் காலத்தில் இருந்ததால் தான் என்னிடம் கடுமையான கேள்விகளை கேட்டார். அவரது மூக்கிலும் மற்ற உறுப்பிலும் ரத்தம் வந்ததை பார்த்தீர்களா என கூறினார்.
3. HewlettPackard என்ற நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கார்லி ஃபியோரினா குடியரசு கட்சியில் டிரம்புக்கு எதிராக ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் இருந்தார். அவரை பற்றி பேசிய டிரம்ப், அந்த பெண்ணின் முகத்தை பாருங்கள். இந்த முகத்திற்கா நீங்கள் வாக்களிப்பீர்கள்? இந்த முகமா நம் அடுத்த ஜனாதிபதி? என அவமதித்தார்.
4. ரோஸி என்னும் நகைச்சுவை நடிகையை பற்றி பேசிய டிரம்ப், ரோஸி மிகவும் முரட்டுத்தனமானவர், கொடூரமானவர். அவருடைய நிகழ்ச்சியில் நான் நடித்திருந்தால் ரோஸியின் அந்தரங்க உறுப்புகளை நேருக்கு நேராக பார்த்து உனக்கு இனிமேல் வேலை கிடையாது எனக் கூறியிருப்பேன் என்றார்.
5. ஒரு முறை நீதிமன்றத்தில் டிரம்ப் மீதான ஒரு வழக்கு விசாரணையின் போது எலிசபத் பெக் என்ற பெண் வழக்கறிஞர் தன்னுடைய 3 வயது குழந்தைக்கு பால் கொடுக்க அவசரமாக அனுமதி வேண்டும் என கேட்டார். ஆனால் அதற்கு டிரம்ப் மறுத்துவிட்டார். இறுதியாக, நீதிமன்றத்திலேயே தனது மார்பகங்களை வெளியே எடுத்து குழந்தைக்கு பால் கொடுக்க தான் நேரம் கேட்கிறேன் என அந்த பெண் கூறிய பின்னரே நீ மிகவும் மோசமானவள் என கண்டித்து விட்டு அனுமதி வழங்கினார் டிரம்ப்.
6. அதிபர் தேர்தலில் தனுக்கு போட்டியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை பற்றி பேசிய டிரம்ப், ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டனுக்கு நிறைய ரகசிய உறவுகள் இருந்துள்ளது. அதற்கு ஹிலாரியும் உடந்தையாக இருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், கணவர் மீது பாலியல் புகார் கூறும் பெண்களை ஹிலாரி மோசமாக தாக்கியுள்ளார் என குற்றம் சாட்டினார்.
7. பெண் செய்தியாளர்களை பற்றி பேசிய டிரம்ப், அவர்கள் பத்திரிகைகளில் என்னை பற்றி என்ன எழுதுகிறார்கள் என்பதில் கவலையில்லை. ஆனால், என்னை பேட்டி எடுக்கும்போது அவர்களுடைய உடலமைப்புகள் எப்படி இருக்கிறது என்பது தான் முக்கியம் என கூறினார்.
8. தொழிலதிபரும், மாடலுமான பாரிஸ் ஹில்டன் பற்றி பேசிய டிரம்ப், அவரை 12 வயது முதலே எனக்கு தெரியும். ஒருமுறை ஹில்டனின் வீட்டிற்கு சென்றபோது அவர் ஒரு அறைக்குள் சென்றதை பார்த்தேன். வாவ், என்ன கவர்ச்சி, அடடா அவருடைய 12 வயதில் எனக்கு இந்த எண்ணம் வந்திருக்க கூடாது என உள்மன ஆசையை போட்டுடைத்தார்.
9. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் டிரம்பின் மகள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிரம்ப், எனது மகள் மிகவும் அழகும் கவர்ச்சியும் உடையவர். ஈவான்கா என்னுடைய மகளாக இல்லாமல் இருந்திருந்தால், நானே அவருடன் டேட்டிங் சென்றிருப்பேன் என கூறினார்.
10. பல்வேறு தொழில் சார்ந்த கூட்டங்களில் பெண்களின் அந்தரங்க உறுப்பை டிரம்ப் தொட்டு தொட்டு பேசுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த அவர், பொதுமக்கள் மத்தியில் நீங்கள் ஒரு பிரபலமாக இருந்தால், பெண்களை எங்கு வேண்டுமானாலும் தொடலாம் என கூறினார்.