'எனக்கு எபோலா நோய் இருக்கிறது' - பயணி அலறல், விமானத்தில் பரபரப்பு

Webdunia
சனி, 11 அக்டோபர் 2014 (20:29 IST)
அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்கு பயணம் செய்த விமான பயணி ஒருவர் தனக்கு எபோலா வைரஸ் நோய் இருப்பதாக விமானத்தில் அலறியதால் பெரும் பரபரப்பு நிலவியது.
 
அமெரிக்காவிலிருந்து டொமினிக்கன் குடியரசுக்குச் சென்ற விமானம் கனா நகரிலுள்ள விமான நிலையத்தை நெருங்கிய போது அமெரிக்க ஆண் ஒருவர் திடீரென ‘எனக்கு எபோலா நோய் இருக்கிறது’ என்று கூச்சலிட்டார். இதனால் விமான பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.
 
அப்போது பாதுகாப்பு கவச ஆடை அணிந்து வந்த 4 அதிகாரிகள் அந்தப் பயணியை விமான நிலையத்திலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
பயணத்தின் போது அந்த நபர் தொடர்ந்து இருமியவாறு இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.
 
அந்தப் பயணி மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கவே இவ்வாறு கூச்சலிட்டிருக்கலாம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.