இஸ்ரேல் – ஹமாஸ் குழுவினர் இடையே போர் தொடங்கியுள்ள நிலையில் ஹேக்கர் குழுக்கள் பல பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளன.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சினை பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் சமீபமாக ஹமாஸ் குழுவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா மற்றும் எல்லைப் பகுதிகளில் கடும் போர் நடந்து வருகிறது. நாளுக்கு நாள் போரின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தருவதாக ஈரான், அரபு நாடுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக கோதாவில் குதித்துள்ளன சில சைபர் அட்டாக் குழுக்கள். இந்த போர் தொடங்கியபோதே பாலஸ்தீன ஆதரவு மனநிலை கொண்ட Ghosts of Palastine என்ற சைபர் குழு உலகம் முழுவதும் உள்ள மற்ற சைபர் குழுக்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி ஹமாஸ் சார்பு குழுவான சைபர் அவெஞ்சர்ஸ், ரஷ்யாவின் அபாயகரமான சைபர் அட்டாக் கும்பலான Killnet மற்றும் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்டவற்றையே அட்டாக் செய்த Anonymous சைபர் குழுவின் சூடான் கிளை ஆகியவை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக களத்தில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அனானிமஸ் சைபர் குழு இதை நேரடியாக அறிவித்துள்ளது. அனானிமஸ் ஏற்கனவே சில முறை இஸ்ரேலின் அரசு சர்வர்களை முடக்கிய சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. இந்த சைபர் கும்பல்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் அரசு சார்ந்த முக்கிய சர்வர்களை முடக்கும் திட்டத்தில் உள்ளதாகவும், தொலைதொடர்பில் பல பிரச்சினைகளை அவர்கள் ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.