அந்த அறிக்கையில் "தென்னாப்பிரிக்காவில், அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெடித்துள்ள கலவரம் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டிருக்கிறது. இந்தக் கலவரங்களின்போது தமிழர்களும், அவர்களின் உடமைகளும் தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. தென்னாப்பிரிக்க அதிபராக 2009-18 காலத்தில் பணியாற்றிய ஜேக்கப் ஜூமா மீதான ஆயுத பேர ஊழல் வழக்கின் விசாரணைக்காக நீதிமன்றத்தில் நேர் நிற்கத் தவறியதற்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, ஜேக்கப் ஜூமா கடந்த வாரம் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மீதான தாக்குதலைத் தடுக்கும்படி, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தொடர்புகொண்டு பேசிய பிறகும் கலவரம் தொடர்வதுதான் கவலையளிக்கிறது. தென்னாப்பிரிக்காவில் எப்போது கலவரம் வெடித்தாலும், அதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது இந்தியர்கள்தான். கவாசூலூ நடால் உள்ளிட்ட தென்னாப்பிரிக்காவில் பல மாநிலங்களில் இந்தியர்கள் வணிக ரீதியாக வலிமையாக இருப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் இத்தகைய தாக்குதல்களை அங்குள்ள சிலர் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.