பிஎம்ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசின் ஒப்புதல்.. கடிதத்தை வெளியிட்ட தர்மேந்திர பிரதான்..!

Mahendran

புதன், 12 மார்ச் 2025 (11:49 IST)
பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்ததாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், தமிழக அரசு அதனை மறுத்து வந்தது. இந்த நிலையில், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒப்புதல் அளித்து தமிழக அரசு அனுப்பிய கடிதத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
 
பி.எம்.ஸ்ரீ  பள்ளிகளுக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நான் கூறியதை தவறான தகவல் என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றத்தில் நான் சொன்னதில் உறுதியாக இருக்கிறேன். 2024 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி, தமிழக பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கடிதத்தை இப்போது நான் பகிர்கிறேன்.
 
திமுக எம்பிக்கள் மற்றும் முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு வேண்டுமானாலும் பொய்களை அடுக்கி வைக்கலாம். ஆனால் உண்மை சரிந்து விழும்போது, தட்டி கேட்பது கிடையாது. முதலில், ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
 
மொழிப் பிரச்சினையை திசைதிருப்பும் தந்திரமாக பேசி, தங்கள் வசதிக்கு ஏற்ப உண்மைகளை மறைக்கிறார்கள். திமுகவின் இந்த  அரசியல், தமிழகத்திற்கும் தமிழக மாணவர்களுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையை அரசியல் பார்வையில் பார்க்க வேண்டாம். அரசியல் ஆதாயங்களை விட, தமிழகத்தில் உள்ள குழந்தைகளின் நலனுக்கு முன்னுரிமை கொடுங்கள்."
 
தர்மேந்திர பிரதானின் இந்த பதிவுக்கு, திமுக தரப்பில் என்ன பதில் வரப்போகிறது என்பதைக் கவனிக்க வேண்டியிருக்கிறது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்