நீங்க என்னவேனாலும் பண்ணுங்க...! போலீஸ் பாதுகாப்பில் சர்கார்

Webdunia
வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:03 IST)
சர்கார் படத்தின் சர்ச்சை காட்சிகளுக்கு எதிராக அதிமுகவினர் படத்தின் பேனர்களை கிழித்து போராட்டம் நடத்தியுள்ளனர். இதனால்  சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
விஜய்யின் சர்கார் படத்தில் தமிழக அரசின் இலவச பொருட்களை தீயில் போட்டு எரிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற காட்சிகளை சர்கார் படக்குழுவினரே நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அமைச்சர்கள் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
 
மேலும் அதிமுகவை சேர்ந்தவர்கள் சர்கார் படத்தின் பேனர்களை கிழித்து எறிந்தனர். சில இடங்களில் பேனர்கள் தீ வைத்தும் கொளுத்தப்பட்டன. அ.தி.மு.க.வினரின்  நடத்திய இந்த போராட்டத்துக்கு எதிராக சில இடங்களில் விஜய் ரசிகர்களும் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 
பிறகு போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். பிறகு சர்கார் படம் ஓடும் தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
 
சென்னையில் மட்டும் சர்கார் படம் 68 தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கு மற்றும் தேவி  தியேட்டரில் நேற்று மாலையில் அ.தி.மு.க.வினர் திரண்டு பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதுபோன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு 68 தியேட்டர்கள் முன்பும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்தந்த பகுதி உதவி கமி‌ஷனர்கள் தலைமையில் தியேட்டர்கள் முன்பு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
 
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர்,  “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்குகளுக்கு இந்த பாதுகாப்பு நீடிக்கும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்