ட்ரெண்டாகும் #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி ஹேஷ்டேக்! பின்னணி என்ன?

புதன், 3 ஜனவரி 2024 (14:37 IST)
பிரபல நடிகை ரம்பா தான் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் கூறிய சம்பவங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.



தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் ரம்பா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்தவர், தற்போது திருமணமாகி குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டிக் கொடுத்த ரம்பா, தான் அருணாச்சலம் படத்தில் ரஜினியோடு நடித்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார்.

அருணாச்சலம் படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் ரம்பா நடித்து வந்தார். அதேசமயம் சல்மான்கான் நடித்த ‘பந்தன்’ என்ற இந்தி படத்தில் நாயகியாகவும் நடித்து வந்தார். இரண்டு படத்தின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் ஒரே இடத்தில் நடந்தபோது, ஒருசமயம் பந்தன் படத்தில் நடித்த சல்மான்கான், ஜாக்கி ஷெரப் ஆகியோர் அருணாச்சலம் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினியை பார்க்க வந்துள்ளனர். அவர்களை கண்ட ரம்பா ஓடி சென்று கட்டியணைத்து அவர்களை வரவேற்றுள்ளார்.

இதனால் ரஜினிகாந்த் ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டாராம். ‘இங்கே தமிழ் படங்களில் நடிக்கும்போது எல்லாருக்கும் ஒரு ஹாய், ஹலோ மட்டும் சொல்லிவிட்டு போறீங்க.. ஆனா பாம்பேகாரங்களை கண்டதும் ஓடிப்போய் கட்டிபிடிச்சிக்குறீங்க. நாங்கலாம் என்ன இளிச்சவாயன்களா?” என கிண்டலாக கேட்டுள்ளார்.



அதுபோல ஒருசமயம் படப்பிடிப்பில் திடீரென விளக்குகள் அணைந்தபோது ரம்பாவை யாரோ பின்னால் தட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியில் ரம்பா கத்திவிட்டாராம். உடனே விளக்குகளை ஆன் செய்துள்ளனர். யார் ரம்பாவை பின்னால் அடித்தது என்று கேட்டபோது, பின்னர் அதை ரஜினிதான் விளையாட்டாக செய்தார் என தெரிய வந்ததாம். இதுபோல ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினிகாந்த் மிகவும் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வார் என அந்த நினைவுகளை ரம்பா பகிர்ந்துள்ளார்.

ஆனால் சமூக வலைதளங்களில் இதுகுறித்து பதிவிட்டு வரும் சிலர் #ரம்பாவிடம்அத்துமீறிய_ரஜினி என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதற்கு பதில் அளித்துள்ள ரஜினி ரசிகர்கள் சிலர், ”ரம்பாவே அதை ரஜினி விளையாட்டாகதான் செய்தார் என சாதாரணமாகதான் சொல்லியிருக்கிறார். ஆனால் ரஜினியை பிடிக்காத சிலர் இதை பெரிதுப்படுத்தி இப்படியான ஹேஷ்டேகுகளை ட்ரெண்ட் செய்கின்றனர்” என்று கூறியுள்ளனர்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்