நடிகர் கமல்ஹாசன், கமல் பண்பாட்டு மையத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவர் தற்போது, ஷங்கரின் இந்தியன் 2, மணிரத்துடன் இணைந்து தக்லைஃப், ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல் 233 ஆகிய படங்களில் நடித்து வருவதுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது, நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் கமல் பண்பாட்டு மையம், ''உலக நாயகன் கமல்ஹாசன் தன் ரசிகர்களுக்காக மய்யம் எனும் பத்திரிகையை 1987-ல் தொடங்கினார். திரைப்பட ரசிகர்களின் ரசனையும், அறிவுத் தேடலும் மேம்பட வேண்டும்; சமுதாய முன்னேற்றத்திலும் நற்பணிகளிலும் தன்னுடைய ரசிகர்கள் தீவிரத்துடன் ஈடுபட வேண்டும் என்பன இதழின் ஆதார நோக்கமாக இருந்தன.
தேடித் தீர்ப்போம்.. எனும் அழைப்புடன் தொடங்கப்பட்ட இதழில் தமிழின் முன்னணி எழுத்தாளர்களும் கலைஞர்களும் பங்களிப்பாற்றினர். ரசிகர் மன்றப் பத்திரிகையாக இல்லாது தரமான இடைநிலை இதழாக மய்யம் திகழ்ந்தது.
மய்யம் இதழ்களில் வெளியான படைப்புகளைத் தொகுத்து மய்யம் - தேர்ந்தெடுத்த படைப்புகள் எனும் புத்தகத்தை கமல் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.
இந்தப் புத்தகம், ஜனவரி 3 முதல் ஜனவரி 21 வரை நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில், யாவரும் பதிப்பக ஸ்டாலில் (598 B) கிடைக்கும்.
விற்பனையாளரை 9042461472 எனும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன்,''கமல் பண்பாட்டு மையத்தின் முன்னெடுப்பில் மய்யம்-தேர்ந்தெடுத்த படைப்புகள் புத்தகம் வெளியாகியுள்ளது. அப்போதிருந்த வாசகர்களுக்கு இந்தப் புத்தகம் இப்போதைய மலரும் நினைவுகள். புது வாசகர்களுக்கு ஒரு காலத்தின் பிரதிபலிப்பைப் பதிவு செய்து காட்டும் ஆதாரம். அனைவருக்குமான வாசிப்பின் கச்சாப்பொருளாக இந்தப் புத்தகம் இருப்பதை நீங்களும் வாசிக்கும்போது உணர்வீர்கள். இதை ஒரு சிறிய காலப் பயணம் என்றே சொல்வீர்கள்.''என்று தெர்வித்துள்ளார்.