இனிமேல் ரஜினி குறித்து பேச மாட்டேன்: ராகவா லாரன்ஸ்

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (08:02 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று விரும்பியவர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸ், இனிமேல் தனது கருத்துக்கள் தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும் என்றும், அதில் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இன்று நான் ஒரு முக்கியமான அறிக்கையை சொல்ல முடிவு செய்துள்ளேன். இனிமேல், எனது அனைத்து கருத்துக்களும், அறிக்கைகளும் எனது தனிப்பட்ட கருத்துகளாகவே இருக்கும். அதில், என் குருநாதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்புபடுத்தவே மாட்டேன். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நல்லதோ கெட்டதோ என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என நான் முடிவு செய்துள்ளேன்.
 
தமிழில் ஒரு பழமொழி உண்டு. கல்லால் அடித்தால் ஆறிவிடும் ஆனால் சொல்லால் அடித்தால் ஆறாது என்று. ஒரு சிலர் ரொம்பவே கல்லால் அடித்துவிட்டார்கள். நானே மன்னிக்க மறக்க நினைத்தாலும் அந்த வார்த்தைகளை மறக்க முடியவில்லை. எனவே யார் மறந்தாலும் அவற்றை நான் மறக்க மாட்டேன். காலம் எல்லாவற்றிற்கும் பதில் சொல்லும்.
 
வள்ளுவர் கோட்டத்தில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று பலர் வற்புறுத்தினார்கள். இயக்குநர் சாய் ரமணி மூலம் நிறைய வாய்ஸ் நோட்டை நான் கேட்டேன். இன்றளவும் நிறைய பேர் நான் தலைவரிடம் அவருடைய முடிவை மாற்றிக் கொள்ள வற்புறுத்துகிறார்கள். அதனால்தான் இன்று இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
 
தலைவரின் முடிவால் எனக்கும் வேதனை தான். ஆனால் தலைவர் வேறேதும் காரணம் சொல்லியிருந்தால் நான் அவரது முடிவை மாற்ற முயற்சிதிருப்பேன். ஆனால், அவரோ உடல்நிலையைக் காரணமாகக் கூறிவிட்டடால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.
 
இப்போது நாம் அவரை நிர்பந்தித்து அதனால் அவரின் உடல்நிலைக்கு ஏதாவது நேர்ந்தால், வாழ்நாள் முழுவதும் நான் குற்ற உணர்வோடு இருக்க வேண்டும். அரசியலில் இல்லாவிட்டாலும் அவர் என்றும் எனது குரு தான். அவருடன் நெருங்கிப் பேசுவதால் எனக்கு அவரின் உடல்நிலை பற்றி நன்றாகத் தெரியும். இப்போது நாம் செய்ய வேண்டியதெல்லாம், அவருடைய உடல் நலனுக்கும் உள அமைதிக்கும் பிரார்த்தனை செய்வது மட்டுமே. அவர் என்றும் நமது பிரார்த்தனையில் இருப்பார். குருவே சரணம்.
 
இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்