ஏன் என் தலைவரை விமர்சிக்கிறீர்கள்? கொந்தளித்த ராகவா லாரன்ஸ்

Webdunia
திங்கள், 27 மார்ச் 2017 (16:03 IST)
ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ததை அடுத்து சமூக வலைதளங்களில் ரஜினி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகவா லாரன்ஸ் ஃபேஸ்புக்கில் கொந்தளித்துள்ளார்.


 

 
தமிழக அரசியல் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று தனது இலங்கை பயணத்தை ரத்து செய்ததாக ரஜினி அறிவித்தார். இதையடுத்து அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதவி மற்றும் பணம் ஆசை இல்லாத என் தலைவனை ஏன் விமர்சிக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
 
அன்புள்ள நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்!
 
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தலைவர் ரஜினிகாந்த் குறித்த தங்கள் பார்வையை, ஆங்காங்கே பலரும் தெரிவித்து வருவதைக் காண முடிகிறது.
நான், அவரது மிகப்பெரிய ரசிகன் மற்றும் தொண்டன் என்ற முறையில், ஏன் அவர் ஒரு என்னுடைய தன்னிகரில்லாத தலைவராக இருக்கிறார் என்று பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
பத்து பேர் பின்னால் இருந்தாலே, கட்சி ஆரம்பித்து, ஆட்சிக்கு வர ஆசைப்படும் இக்காலத்தில், கோடிக்கணக்கான உயிர் ரசிகர்கள் உடனிருந்தும், அரசியல் நாற்காலிக்கு ஆசைப்படாதவர்தான் என் தலைவர்.
 
இரண்டாவதாக, இத்தனை பெரிய ரசிகர்படை வைத்திருக்கும் என் தலைவர், மிக எளிதாக, ஆறு மாதத்திற்கு ஒரு படம் நடித்து வெளியிட்டு, மிகப்பெரும் பணம் சேர்க்கலாம். ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வது, அவர் பணத்தின் மேல் ஆசை இல்லாதவர் என்பதை நிரூபிக்கிறது.
 
பிரதமர் அவர்களது நம் மாநில வருகையின்போது, அவர் சந்திக்க விரும்பிய, சந்தித்த ஒரே தலைவர் அநேகமாக சூப்பர் ஸ்டார் மட்டுமாகத்தான் இருக்கும். அவரது நன்மதிப்பும், போலித்தனமின்மையும் இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.
 
இந்தியாவிலேயே, நட்சத்திர அந்தஸ்தின் உச்சத்தில் இருந்துவரும்போதும், நாட்டிலேயே மிகப்பிரபலமான நடிகராக இருக்கும்போதும், எந்தவிதமான ஆசையும், ஆணவமும் இல்லாமல், ஆன்மீக வழியைத் தேர்ந்தெடுத்து, பயணம் செய்பவர் அவர்.
 
இவை, தலைவரை மதித்து வணங்கும் என் ஒருவனின் தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. கோடிக்கணக்கான மக்கள் அவரை நேசிப்பதற்கு காரணமும் இதுதான்.
 
சிலர், தலைவரைக் குறித்து தவறாக பேச நினைக்கலாம். ஆனால், அவரை நன்கு அறிந்தவர்கள், அவரை மதித்து வணங்குவார்கள். அந்த கோடிக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவன் என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 
 
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்