டி.இமானை கழட்டிவிட்ட பிரபு சாலமன்

Webdunia
சனி, 15 ஜூலை 2017 (12:16 IST)
இத்தனை நாட்களாக தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து வந்த டி.இமானை கழற்றி விட்டுவிட்டு, இளம் இசையமைப்பாளருடன் கைகோத்துள்ளார் பிரபு சாலமன்.


 

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு அறிமுகமான படம் ‘கும்கி’. ஹீரோயினாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். டி.இமான் இசையில் யுகபாரதி எழுதிய அத்தனைப் பாடல்களுமே நன்றாக இருந்தன. படமும் நன்றாக ஓடி, அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுத்தால் விக்ரம் பிரபு, லட்சுமி மேனனைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கப் போகிறார் பிரபு சாலமன்.

நடிகர்கள்தான் புதிதாக இருப்பார்கள் என்று பார்த்தால், இசையமைப்பாளரைக் கூட மாற்றிவிட்டார் பிரபு சாலமன். வழக்கமாக, பிரபு சாலமன் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, தயாரிக்கும் படங்களுக்குக் கூட டி.இமான் தான் இசையமைப்பாளர். ஆனால், இந்தப் படத்துக்கு நிவாஸ் பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன். இதனால், இருவருக்கும் இடையில் மனக்கசப்பா என விசாரிக்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.
அடுத்த கட்டுரையில்