பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஓவியா மன அழுத்தம் காரணமாக பிக் பாஸ் வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அதன் பின்னர் அவர் தொடர் மன உளைச்சல் காரணமாக பிக் பாஸ் வீட்டில் இருந்து தாமாக முன்வந்து வெளியேறினார்.
நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் மிகவும் பிரபலமானார். அவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியது. தனது வெளிப்படையான பேச்சு, தைரியம், பிரச்சனைகளை கையாளும் விதம், புறம் பேசாமல் இருப்பது என தனது குணத்தால் மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார் ஓவியா.
இதனாலேயே வீட்டில் உள்ள அனைவராலும் ஒதுக்கப்பட்டு ஒவ்வொரு வாரமும் நாமினேஷனில் வந்தாலும் தனது ரசிகர்களின் ஆதரவால் பெருவாரியான வாக்குகளை பெற்று தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் நிலைத்திருந்தார்.
ஆனால் ஜூலியின் நம்பிக்கை துரோகம், காயத்ரி தலைமையில் அனைவரும் ஒன்றிணைந்து அவரை தனிப்படுத்தியது, இது எல்லாவற்றிற்கும் மேலாக தனக்கு ஆறுதலாக இருந்த ஆர்வின் நிராகரிப்பு என மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார் ஓவியா.
இதனையடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றார் ஓவியா. ஆனால் அதன் பின்னர் தான் சும்மா தான் குதித்தேன் என சினேகனிடம் கூறினார் ஓவியா. இப்படி தொடர் மன உளைச்சலில் இருந்த ஓவியா மருத்துவரின் ஆலோசனையை பெற்றும் பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க விரும்பாமல் வெளியேறினார்.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி அவ்வளவு சுவாரஸ்யம் இல்லாமல் படுத்துவிட்டது. ஓவியா இல்லாத பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என அவரது ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டனர்.
இந்நிலையில் ஓவியா பிக் பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பாலாஜி போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து ஓவியா தற்கொலைக்கு முயன்ற வழக்கில் அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஓவியா தற்கொலை முயற்சி விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை விளக்க நேரில் ஆஜராகும்படி நாசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.