தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு எதிராக அதிருப்தி கோஷ்டியை சேர்ந்த பட தயாரிப்பார்கள், சென்னை தியாகராயநகரில் இயங்கும் தயாரிப்பார்கள் சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டி போராட்டம் நடத்தினார்கள்.
பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் பூட்டை திறந்து அலுவலகத்தை விஷால் தரப்பினரிடம் ஒப்படைத்தனர்.
சங்க அலுவலகத்தை பூட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. சங்கத்துக்கு பூட்டு போட்டது தொடர்பாக ராதாகிருஷ்ணன், ஏ.எல்.அழகப்பன், எஸ்.வி.சேகர், கே.ராஜன், டி.சிவா, வடிவேல், சுரேஷ் காமாட்சி, தனஞ்செயன், விஜயகுமார், பழனிவேல், ஷக்தி சிதம்பரம், ஜான்மேக்ஸ், அடிதடி முருகன், விடியல்ராஜ், திருமலை, பஞ்ச் பரத், சுப்பையா, ஜோதி, சவுந்தர்ராஜன், பாபுகணேஷ், அஷோக், பி.ஜி.பாலாஜி, குண்டு முருகன், அஸ்லாம், சீனிவாசன், மீரா கதிரவன், தமிழரசன், கணபதி, சாலை சகாதேவன் ஆகிய 29 பேருக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.
விதியை மீறி சங்கத்தை பூட்டியதற்கு 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டு இருந்தனர். கடந்த மாதம் 28-ந் தேதி இந்த நோட்டீசை அனுப்பினர். விளக்கம் அளிப்பதற்கான கெடு தேதி நேற்றுடன் முடிந்தது. அதன்படி பலரும் விளக்கத்தை அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து 29 பேர் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய சங்கத்தின் செயற்குழு விரைவில் கூடுகிறது.