செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் ரிலீசுக்கு தயாரானது மட்டுமின்றி சென்சார் சான்றிதழும் பெற்று வரும் 30ஆம் தேதி ரிலீஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. அதற்கான விளம்பரங்களும் சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது திடீரென இந்த படம் ரிலீஸ் ஆகும் தேதி மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜூலை 1ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வருவதால், ஜிஎஸ்டிக்கான வரியை தயாரிப்பாளர் கட்டுவதா? அல்லது விநியோகிஸ்தர் கட்டுவதா? என்பது குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும், இந்த விஷயத்தில் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகிஸ்தர்கள் இடையே எந்த உடன்பாடும் ஏற்படாததால் 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மட்டுமின்றி இன்னும் ஒருசில படங்களின் ரிலீஸ் தேதியும் ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா ஸ்வேதா உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனர் கவுதம் மேனனின் 'ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும், பிரசன்னா படத்தொகுப்பு பணிகளையும் செய்துள்ளனர்.