நம்பியார் பாடல்கள் வெளியீடு - வாடகைக்கு அழைத்து வரப்பட்ட கல்லூரி மாணவிகள்

Webdunia
வியாழன், 10 ஜூலை 2014 (18:15 IST)
நேற்று மாலை நடிகர் ஸ்ரீகாந்த் தயாரித்து நடித்திருக்கும் நம்பியார் படத்தின் பாடல்கள் சென்னை தேவி திரையரங்கில் வெளியிடப்பட்டது.
விழாவில் சரத்குமார், சூர்யா, ஆர்யா படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பிரமாண்டமான தேவி திரையரங்கை நிறைத்திருந்தவர்கள் இளம் பெண்கள். அதுவும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள்.
பொதுவாக பாடல்கள் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களையும், படம் சம்பந்தப்பட்டவர்களின் சொந்தக்காரர்களையும், மீடியாவையும் கழித்தால் படத்தில் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பத்து இருபது பேர் தேறுவார்கள். மார்க்கெட் டல்லாகிப் போன ஸ்ரீகாந்தின் படவிழாவுக்கு இவ்வளவு கல்லூரி மாணவிகளா? அதுவும் இரவு நடக்கும் விழாவுக்கு?

விழா ஒருபுறம் நடந்து கொண்டிருக்க இந்த மாணவிகள் யார், இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள், இவர்களை அனுப்பியது யார் என்று அறியும் ஆவலில் அவர்களிடம் பேச்சுக் கொடுத்தனர் விழாவுக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள். கிடைத்த விவரங்கள் மகிழ்ச்சிக்குரியவை இல்லை.
விழாவுக்கு வந்திருந்த சுமார் 300 கல்லூரி மாணவிகள் அனைவரும் ராணிமேரி மற்றும் காயிதே மில்லத் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். வெளியூர்களிலிருந்து வந்து ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள். அதிகமும் ஏழை மாணவிகள். அவர்களிடம் சூர்யா, ஆர்யா போன்றவர்களை பார்க்கலாம் என்று ஆசைகாட்டி அவர்களின் ஹாஸ்டல் வார்டனே விழாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இந்த இலவச ஆள்சேர்ப்புக்குப் பின்னால் இயங்கியது யார் என்பது தெரியவில்லை. பணம் கைமாறியதா என்பதும் தெரியவில்லை. விழாவுக்கு வந்த மாணவிகளுக்கு பெப்சியும், பப்சும் தரப்பட்டன. பயணப்படி தரப்படவில்லையாம்.
 
அரசியல் கூட்டம் என்றால் குவார்ட்டர் கோழிப் பிரியாணி. சினிமா விழாவுக்கு பெப்சி பப்ஸ். இதனை முளையிலேயே கிள்ளி எறிவது அவசியம்.
 
இதுஒருபுறமிருக்க விழாவுக்கு வந்தவர்களின் மொத்த கவனமும் இந்தப் பிரச்சனையின்பால் திரும்பியதால் விழாவின் மீதான போகஸ் இந்த பிரச்சனையின் மீது திசை மாறியது.
 
நம்பியாரைப் பொறுத்தவரை விளம்பரமே வினையாகிவிட்டது.