மேதகு திரைப்படம் ஆகஸ்ட் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் பிரபாகரனின் இளமைக்கால வாழ்வை சொல்லும் படமாக வெளியாகியுள்ளது மேதகு. இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்றது. முதல் பாகத்தில் பிரபாகரன் எப்படி ஆயுதப் பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது வரை மட்டுமே சொல்லப்பட்டு இருந்தது. அடுத்தடுத்த பாகங்கள் விரைவில் வரும் எனப் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது மேதகு-2 திரைப்படம் உருவாகியுள்ளது. முதல் பாகத்தில் நடித்தவர்கள் இல்லாமல் புதுக்கலைஞர்கள் இந்த படத்தை உருவாக்கியுள்ளனர். நவம்பர் 26 ஆம் தேதி மறைந்த விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் 67 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மேதகு 2 படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியானது. டிரைலருக்கு பரவலான வரவேற்புக் கிடைத்ததை அடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.
இந்நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய பாகம் போல ஓடிடியில் வெளியாகாமல் திரையரங்குகளில் ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த படத்துக்கு சென்ஸார் சான்றிதழ் கிடைக்காது என்பதால் ஓடிடியில் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் தமிழ்ஸ் ஓடிடி என்ற தளத்தில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.