தமிழக அரசியல்வாதிகளின் பொய்யை நம்பி ஏமாந்துவிட்டார் ரஜினி. லைகா

Webdunia
ஞாயிறு, 26 மார்ச் 2017 (23:33 IST)
இலங்கையில் உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 150 வீடுகள் கட்டி வழங்கும் நிகழ்ச்சிக்கு லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவிற்கு 2.0 படத்தின் தயாரிப்பாளரும் லைகா நிறுவனருமான சுபாஷ்கரன், ரஜினிக்கும் அழைப்பு விடுத்தார். இதையேற்று இலங்கை செல்ல ரஜினியும் ஒப்புக்கொண்டார்.




 


ஆனால் திருமாவளவன், வைகோ, வேல்முருகன், டாக்டர் ராமதாஸ் ஆகியோர்கள் ரஜினிகாந்த் இந்த விழாவிற்கு செல்ல கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து ரஜினிகாந்த் தனது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதுகுறித்து லைகா நிறுவனம் ரஜினியை இலங்கை செல்லவிடாமல் தடுத்த தமிழக அரசியல்வாதிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, லைக்கா வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசியல்வாதிகளின் பொய்க்குற்றச்சாட்டை நம்பி, ரஜினியின் இலங்கைப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவும் வகையில்தான் வீடுகள் கட்டி வழங்க உள்ளோம். ரஜினியின் வருகையை ஒட்டி, மேலும் பல நலத்திட்டங்களை தொடங்கவும் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், வைகோ, திருமாவளவன் போன்றோர் ரஜினிகாந்துக்கு வீண் கெட்டப் பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எனவே, ரஜினியின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர்களுக்காக எந்த நலத் திட்டமும் செய்யாத வைகோ, திருமாவளவன் எங்களை குறைசொல்வது வேதனையாக உள்ளது.

ரஜினிக்கு தேவையற்ற தர்மசங்கடம் ஏற்படுத்தியுள்ளனர். எனினும், ஏப்ரல் 10 ம் தேதி, போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் திட்டமிட்டபடி வீடுகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடத்தப்படும்.
அடுத்த கட்டுரையில்