கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முதல் முறையாக உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் 130 கோடி மக்களும் வீட்டிலேயே உள்ளனர் என்பது இதுவரை வரலாற்றில் இல்லாத ஒன்று. இந்த நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு இருக்கும் ஒரே பொழுதுபோக்கு தொலைக்காட்சி தான். செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தான் தற்போது மக்களுக்கு பொழுது போக்காக உள்ளது
இந்த நிலையில் தூர்தர்ஷன் நாளை முதல் ராமாயணம் சீரியலை ஒளிபரப்ப உள்ளது. கடந்த 1987ஆம் ஆண்டு முதல் ஒன்றரை வருடங்கள் ஒளிபரப்பான இந்த சீரியல் நாடு முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ராமாயணம் சீரியல் நாளை முதல் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரையிலும் இரவு 9 மணி முதல் 10 மணி வரையிலும் ஒளிபரப்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும் ராமாயணம் போலவே விரைவில் மகாபாரதமும் ஒளிபரப்பாகும் என்று தூர்தர்ஷன் அறிவித்துள்ளது
ராமாயணம் மற்றும் மகாபாரதம் நிகழ்ச்சியை மீண்டும் 23 வருடங்கள் கழித்து பார்க்கும் மகிழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது