திருமணமான தம்பதிகளுக்கு இடையேயான சிக்கல்களைப் பேசும் இறுகப்பற்று திரைப்படம், திரையரங்க வெளியீட்டில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஓடிடி வெளியீட்டிலும் உச்சம் தொட்டுள்ளது .
பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், யுவராஜ் தயாளன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் இறுகப்பற்று. இதில் ஷ்ரத்தா ராம ஸ்ரீநாத், அபர்நதி, சானியா ஐயப்பன், விக்ரம் பிரபு, விதார்த் மற்றும் ஸ்ரீ உள்ளிட்ட நடிகர்கள் திறம்பட நடித்திருந்தனர். திருமண உறவுகளின் நுண்ணிய பிரச்சினைகளைப் பற்றியும் அதற்கான தீர்வுகள் பற்றியும் பேசிய இத்திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
கதை, திரைக்கதை, வசனங்கள், நடிகர்களின் நடிப்பு என படம் பற்றிய ஒவ்வொரு விஷயமும் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன. இப்படம் அக்டோபர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது. அர்த்தமுள்ள கதை, சுவாரசியமான திரைக்கதை, அழுத்தமான வசனங்கள் மற்றும் யதார்த்தமான நடிப்பு ஆகியவற்றின் காரணமாக இது அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் பெருவாரியான பாராட்டைக் குவித்தது.
வெளியான சில நாட்களிலேயே, சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள், படத்தின் சிறிய காணொலிகள், திரையரங்குக்கு வெளியே ரசிகர்களின் கருத்து, படத்தின் வசனங்களை ட்வீட்டாகப் பகிர்தன் என நெட்டிசன்கள் படத்தைக் கொண்டாட ஆரம்பித்தனர். நிஜமாகவே ஒரு நல்ல மருத்துவரின் கவுன்சிலிங்கை கேட்டுவிட்டு வந்தது போல இருந்ததாகவும்,படம் நேர்மறையாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பல தம்பதிகள் பகிர்ந்திருந்தனர்.
மேலும் இந்தப் படம் தொடர்பான பல்வேறு ஆரோக்கியமான விவாதங்களையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. திரையரங்கில் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நவம்பர் 6 முதல் பிரபல OTT தளமான நெட்ஃபிக்ஸில் இறுகப்பற்று தனது ஸ்ட்ரீமிங் பயணத்தைத் தொடங்கியது. திரையரங்க வெளியீடு போலவே ஓடிடியில் வெளியான பிறகும் உடனடியாக மக்களின் கவனத்தையும், பாராட்டையும் பெற ஆரம்பித்தது.
முக்கியமாக வெளியான நாளிலிருந்து இன்று வரை நெட்ஃபிளிக்ஸின் டாப் 10 ட்ரெண்டிங் பட்டியலில் இறுகப்பற்று தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. படத்தின் தரத்திற்கு இதுவே சான்றாகும். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "இறுகப்பற்று திரைப்படத்தின் அற்புதமான வரவேற்பு எங்களுக்கு அலாதியான மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. மக்களின் பாராட்டுகளைப் பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறோம்.
உணர்வுப்பூர்வமான, உண்மைத்தன்மையை கொண்ட ஒரு கதைக்களம் பார்வையாளர்களிடம் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது. ஆழமான, தனித்துவமான கதைகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கிற எங்கள் அர்ப்பணிப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே இதைப் பார்க்கிறோம்".
இத்திரைப்படத்தில் பேசப்பட்டிருக்கும் கரு, அதன் கதாபாத்திரங்கள், அவை பேசும் உணர்ச்சிகள் என அனைத்தும் எல்லை கடந்து அனைவரையும் தொடும், உலகளாவிய ரசிகர்களுக்கானது. இதனால், படத்தின் அமோக வெற்றியைத் தொடர்ந்து படத்தின் ரீமேக் உரிமைக்கான போட்டி அதிகரித்துள்ளது. பிற மொழிகளைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் பார்வையாளர்களுக்கு இந்த நெகிழ்ச்சியான படைப்பைக் கொண்டு வருவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பார்வையாளர்களின் தொடர் ஆதரவிற்கு இறுகப்பற்று படக்குழு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. OTT தரவரிசையில் முக்கிய இடம்பிடித்ததோடு, இப்படத்தின் தாக்கம் பல ஆண்டுகளாக மக்களின் இதயங்களில் வாழும் என்று நம்புகிறது. இவற்றையெல்லாம் விட முக்கியமாக, இறுகப்பற்று இன்னும் தமிழகத்தின் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.