விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டுப் படங்களும் நாளை ரிலிசாகவுள்ள நிலையில் இரண்டுப்படங்களுக்கும் நள்ளிரவுக் காட்சிகள் மற்றும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படுமா என்ற சந்தேகம் இன்று வரை நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ரஜினி, விஜய், அஜித் ஆகிய நடிகர்களின் படங்கள் எப்போது ரிலிஸ் ஆனாலும் அது அவர்களின் ரசிகர்களுக்குப் பண்டிகைதான். அப்படி இருக்கையில் பண்டிகைக் காலத்தில் ரிலிஸானால் சொல்லவா வேண்டும் ? அதிகாலைக் காட்சி, நள்ளிரவுக் காட்சிகள் எனதிரையிட்டு திரையரங்கங்கள் வசூலை அள்ளிவிடும்.
ரஜினி, அஜித் என தமிழ் சினிமாவின் இரு உச்ச நடிகர்களின் படங்கள் நாளை ரிலிசாக இருக்கின்றன. ஆனாலும் இப்போது வரை இப்படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. வழக்கமாக ரோஹினி, காசி, ஆல்பர்ட் போன்ற தியேட்டர்களில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டு டிக்கெட் விற்பனை இந்நேரம் முடிந்திருக்கும். ஆனால் இம்முறை தெளிவானத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழக அரசு சார்பில் பண்டிகைக் காலங்களோ அல்லது பெரிய நடிகர்களின் படங்கள் ரிலிஸோ எதுவானாலும் ஒரு நாளைக்கு 5 காட்சிகளுக்கு மேல் திரையிடக்கூடாது எனற சட்டமும் இதற்கு ஒரு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறப்புக்காட்சிகள் திரையிடுவதின் மூலம் தியேட்டர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் திரையரங்கங்களோ அல்லது ரசிகர்களோ அதற்குக் கட்டுப்படப் போவதில்லை என்பது உலகறிந்த உண்மை. எப்படியாவது ஏற்பாடு செய்து சிறப்புக்காட்சிகளைத் திரையிட திரையரங்கங்கள் முயன்று வருவதாகவும், ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அதற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பேசப்படுகிறது.