சைபர் கிரைமுக்கே ஆட்டம் காட்டிய ‘தமிழ் ராக்கர்ஸ்’

Webdunia
திங்கள், 12 நவம்பர் 2018 (18:12 IST)
ரகசிய இணையதளமான ‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனத்தின் உரிமையாளர்களை கண்டுபிடிப்பது சிரமம் என்று சைபர் கிரைம் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
 
தமிழ் திரைத் துறையினருக்கு பெரும் சவாலாக ‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் உள்ளது. புதிய திரைப்படங்கள் வெளியாகும் அதே தினத்தில் ‘தமிழ் ராக்கர்ஸ்’ இணையதளத்தில் படம் 
வெளிவந்து விடுவதால் திரைத் துறையினருக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 
 
‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனம் எங்கிருந்து செயல்படுகிறது, இதன் அட்மின் யார், அதற்கு எப்படி பணம் கிடைக்கிறது, அவர்களை ஏன் தடுக்க முடிய வில்லை என்பது போன்ற கேள்விகள் அனைவருக்கும் எழுகிறது.
 
இந்நிலையில் தமிழ் ராக்கர்ஸை தீர்த்து கட்டவேண்டுமென்ற நோக்கத்தில் சைபர் கிரைம் முடிவெடுத்து களத்தில் இறங்கினர். ஆனால் தற்போது எங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை என சைபர் போலீஸ் கைவிரித்துவிட்டது.
 
இதை பற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, 
 
2011-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் தமிழ் ராக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களாக பலர் உள்ளனர். கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இவர்கள் செயல்படலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 
 
இங்கிலாந்தில் உள்ள ‘ தமிழ் ராக்கர்ஸ்’ அட்மின் டிக்ஸன் ராஜ், சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையத் தின் அட்மின் அர்விந்த் லோகேஸ்வரன் ஆகியோரின் புகைப்படங்கள் கிடைத்துள்ளன. அதை வைத்தும் விசாரணை நடத்தினோம். ஆனால் யாரையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.
 
திரைப்படத் துறையினருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை திருட்டு சிடி விற்பனைதான் பெரும் பிரச்சினையாக இருந்தது. இது குறித்த புகார் வரும்போது, திருட்டு சிடி விற்பனை செய்யும் கடைக்காரர், அதை தயார் செய்யும் இடம் என உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க முடிந்தது. 
 
ஆனால், ‘தமிழ் ராக்கர்ஸ்’ நிறுவனத்தினர் ஏதோ ஒரு இடத்தில் இருந்துகொண்டு உலகம் முழுவதும் திரைப்படத்தை வெளியிடுகிறார்கள்.
 
இணையதள வசதிக்காக நாம் பெரும்பாலும் பயன்படுத்துவது கூகுள், மைக்ரோசாப்ட் போன்றவை மட்டும்தான். இவை எல்லாவற்றையும் கடந்து மிகப்பெரிய  ரகசிய இணையதள உலகமும் உள்ளது. அந்த வகையில் டார், டார்ச் போன்ற இணையதளங்கள் உள்ளன. 
 
அதாவது, நாம் சாதாரணமாக கூகுளில் ஒரு வீடியோவை பதிவிறக்கம் அல்லது பதிவேற்றம் செய்யும்போது இதை யார் செய்தார்கள் என்பதை நாம் பயன்படுத்தும் கணினியின் ஐபி முகவரி அல்லது செல்போனின் ஐஎம்இஐ எண்ணை வைத்து கண்டுபிடிக்க முடியும். ஆனால் டார், டார்ச் போன்ற ரகசிய இணையதளங்களில் கணினியின் ஐபி முகவரியை கண்டுபிடிக்க முடியாது.
 
இப்படி ஒரு ரகசிய இணையதளம் மூலம் தான் தமிழ் ராக்கர்ஸ் இயங்கி வருகிறது.இந்த ரகசிய இணையதளங்களை பயன்படுத்தி, நாம் இந்தியாவில் இருந்து கொண்டே இங்கிலாந்தில் இருப்பதுபோல நமது ஐபி முகவரியை மாற்றிக் காட்ட முடியும். 
 
இதனால்தான் அதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் ஏற்படுகிறது. தமிழ் ராக்கர்ஸ் என்ற முகவரியை நாம் தடை செய்தால், தமிழ் ராக்கர்ஸ் நெட்,  தமிழ் ராக்கர்ஸ் ஜி வொய் (Y)  என டொமைன் முகவரியை மாற்றி வெவ்வேறு பெயர்களில் அவர்கள் தொடர்ந்து திரைப்படங்களை வெளியிடுகின்றனர்.
 
செல்போனில்கூட திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யும் தொழில்நுட்பம் வந்த பிறகுதான் தமிழ் ராக்கர்ஸ் அசுர வளர்ச்சி அடைந்தது. 
 
இந்த வளர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், படங்களை பதிவிறக்கம் செய்யும்போது அதனுடன் ஒரு பாப்அப் விளம்பரமும் பதிவிறக்கம் செய்யப்படும்.
 
அந்த விளம்பரம் மூலம்தான் அவர்கள் மாதம் ரூ.10 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை சம்பாதிக்கின்றனர். இந்த விளம்பரம் கம்பெனியை தொடர்பு கொண்டு சைபர் கிரைம் காவல்துறையினர்தமிழ் ராக்கர்ஸ் குறித்து கேட்டுள்ளனர்.ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. 
 
இவர்களின் இந்த தைரியத்தையும் தற்காப்பு வித்தைகளையும் வைத்து பார்கும்போது, தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் பினாமி நிறுவனமாக தமிழ் ராக்கர்ஸ் இருக்கலாமோ என்ற சந்தேகமும் உள்ளது. 
 
ஆதலால், தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது. இதில் அதிகமான சவால்களும், அதிக பொருட்செலவும் உள்ளது” என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்