தமிழகத்தில் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இயக்குனர் பாரதிராஜா மேலும் திரையரங்குகள் திறக்கவும், தமிழ் திரை உலகிற்கு விதிக்கப்பட்டவரிகளை நீக்கவும் ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
எப்போதெல்லாம் நாங்கள் சந்திக்கமுடியுமா எனக் கேட்டபோதெல்லாம் திரையுலகிற்காய் உங்கள் அனுமதிக் அதவுகளும்... பிரச்சனைகளை புரிந்துகொள்ள செவிகளும் காலந்தாழ்த்தியதே இல்லை. அதற்கு எங்கள் நன்றிகள்.
எங்கள் திரையுலகம் இருண்டுவிட்டதோ... திரும்ப தழைக்க அடுத்த ஆண்டு ஆகிவிடுமோ? பட்டினியால் பல குடும்பங்கள் வதங்கிவிடுமோ என்ற பதட்டமும், முடிவு தெரியா குழப்பமும் மேலிடத்தான், கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக சின்னத் திரை படப்பிடிப்பு போலவாவது நடத்த அனுமதியுங்கள் எனக் கோரிக்கை வைத்தோம்.
இப்போதும்... கொரோனாவின் பரவல் சூழலில் தமிழக அரசு நினைத்திருந்தால் நாங்கள் படப்பிடிப்பிற்குச் செல்வதை முடக்கியே வைத்திருந்திருக்கலாம். ஆனால், அரசு கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றி முழுமையாக செயல்படுவோம் என்ற எங்களின் உறுதிமொழியையும் பட்டினியால் வாடுவோர்களையும் கருத்திற்கொண்டு படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததை நன்றியோடு பார்க்கிறோம். அந்த கனிவைக் காட்டிய தமிழக முதல்வராகிய தங்களுக்கும், எங்கள் பிரச்சனைகளைக் கூர்ந்து கேட்டுக்கொள்ளும் அமைச்சர் கடம்பூர் அவர்களுக்கும் நன்றிகள் பல.
பணம் போட்ட தயாரிப்பாளர்கள், பண உதவி செய்தவர்கள் என எல்லோரும் இதனால் இழப்பிலிருந்து மீள முடியும். ஏற்கெனவே பிற்சேர்க்கைப் பணிகளுக்கு அனுமதி கொடுத்ததிலிருந்தே எங்களின் மீது நீங்கள் காட்டிய அக்கறையைப் புரிந்துகொண்டோம். படப்பிடிப்புத் தளங்களுக்கும் செல்ல அனுமதி தந்துள்ளீர்கள். இன்னும் சில வரைமுறைகளோடு எங்கள் திரையரங்குகளையும் இயங்க ஆவண செய்வீர்கள் எனக் காத்திருக்கிறோம்
முன்னமே நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்கக் கேட்டுக் கொள்வதோடு, திரையரங்க வரிவிகிதங்களையும் குறைத்து சினிமா வாழ வழிவகை செய்தால் அத்தனை ஆயிரம் கலைக் குடும்பங்களும் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவர்களாவோம்.
நாங்கள் உண்மையாகவே மீளும் நாள் திரையரங்கங்கள் திறக்கும் நாள்தான். அதன் மூலமே எம் தயாரிப்பாளர்கள் முடக்கிய பணத்தைப் பெற முடியும். மக்களின் நலத்தின் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு சமூகப் பிரக்ஞைதானென்றாலும்... வழி முறைகள் வகுத்துக் கொடுத்து திறந்துவிட மாட்டீர்களா என நப்பாசைப் படுகிறேன். ஆவண செய்ய அத்தனை சினிமா குடும்பங்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். செய்வீர்களெனவே காத்திருக்கிறோம்.