மலையாள திரைக்கதை எழுத்தாளரும் இயக்குனருமான சச்சி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மலையாளத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் என்ற இரு முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். மலையாளத்தின் பிரபலமான திரைக்கதை எழுத்தாளர் சாச்சி இயக்கிய முதல் திரைப்படமான இது அங்கே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகி தமிழ்நாட்டிலும் கவனம் ஈர்த்தது. போலிஸ் அதிகாரி ஒருவருக்கும் ராணுவ வீரர் ஒருவருக்கும் இடையே ஏற்படும் மிகச்சிறிய மோதல் எந்த அளவுக்கு சென்று இருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே கதை.
இந்த படத்தை பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்ய போட்டிகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சச்சின் உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘சச்சிக்கு இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின்னர் அவரது நரம்பு மண்டலம் செயல்படுவது குறைந்துள்ளது. மூளைக்கு பிராண வாயு செல்வது தடைபட்டுள்ளதால், மூளையிலும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இப்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். 48 முதல் 72 மணி நேர சிகிச்சைக்குப் பின்னரே அவரது உடல்நிலை குறித்து தெரிவிக்கமுடியும்’ என தெரிவித்துள்ளது.