நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ஆர்யா - சாயிஷா திருமணம் முடிந்ததை அடுத்து கோலிவுட்டின் அடுத்த திருமணமான விஷால் - அனிஷா நிச்சயதார்த்தம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷாலும், ஆந்திராவை சேர்ந்த நடிகை அனிஷாவும் காதலித்து வரும் நிலையில், இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் வருகிற 16-ந் தேதி நடைபெற இருக்கிறது.
நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார். நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகே திருமணம் என்று கூறி வந்த அவர் ஐதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி தெரிவித்திருந்தார்.
பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி, அமெரிக்காவில் பட்டப்படிப்பு படித்தவர். படிப்பு முடிந்து இந்தியாவுக்குத் திரும்பிய பின்னர், விஜய் தேவர்கொண்டா நடித்த `பெல்லி சூப்லு', `அர்ஜுன் ரெட்டி' ஆகிய படங்களில் நடித்தார்.
பிறகு சில மாதங்களாக விஷாலும், அனிஷாவும் காதலித்து வந்த நிலையில் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கின்றனர். விஷால் - அனிஷா திருமண நிச்சயதார்த்தம் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) ஐதராபாத்தில் நடைபெற இருக்கிறது.
திருமணம் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டு திருமணம் சென்னையில் கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்தில் நடக்கும் என்று விஷால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.