நடிகர் சத்யராஜ் நேரில் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும்: வாட்டாள் நாகராஜ் பேச்சு!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (10:41 IST)
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், சத்யராஜ், ராணா, நாசர் நடிகைகள் அனுஷ்கா, தமன்னா, ரம்யா  கிருஷ்ணன், ரோஹினி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘பாகுபலி 2' திரைப்படம் வருகிற 28-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.


தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆந்திரா, தமிழகம் என‌ நாடு முழுவதும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
 
காவேரி பிரச்சனை தொடர்பாக கடந்த 9 வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகம் சார்பில் கண்டன ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடந்தது. 9 வருடங்களுக்கு முன்பு நடிகர் சத்யராஜ் பேசியதற்கு இப்போது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், அவர்  கேட்க மறுத்தால் கர்நாடகாவில் பாகுபலி 2 படம் வெளியிட முடியாது என முன்னதாக கன்னட அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்திருந்தார்.
 
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் தனது பேச்சு கன்னட மக்களை பாதித்திருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இந்நிலையில் கர்நாடகாவில் தொடர்ந்து பல இடங்களில் சத்யராஜ் உருவ பொம்மையை கன்னட அமைப்பினர் தீ வைத்து  கொளுத்தினர்.
 
இதனை தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் பேசுகையில், சத்யராஜ் உட்கார்ந்து சொல்லுவதை நாங்கள் ஏற்க முடியாது, நேரில் வந்து சத்யராஜ் எங்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும் பட்சத்தில் நாங்கள் அறிவித்தப்படி ஏப்ரல் 28ம் தேதி  கர்நாடகாவில் ‘பந்த்’ நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்