ரோமியோ ஜூலியட் பெயர் தப்புமா?

Webdunia
புதன், 16 ஏப்ரல் 2014 (17:55 IST)
இந்தப் பெயரை எப்படி இவ்வளவுநாள் விட்டு வைத்தார்கள்? ரோமியோ ஜூலியட் படத்தின் இயக்குனர் லஷ்மனின் வியப்பில் நியாயமிருக்கிறது.
தமிழில் தயாராகும் 90 சதவீதப் படங்கள் காதலை மையப்படுத்தியவை. காதல் என்றதும் நினைவுக்கு வரும் ரோமியோ ஜூலியட் பெயரை இதுவரை எந்த இயக்குனரும் பயன்படுத்தாதது ஆச்சரியம். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.
 
தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே வரிச்சலுகை என்று திமுக அரசு அறிவித்த போது உனக்கும் எனக்கும் சம்திங் சம்திங் படம் உனக்கும் எனக்கும் என்றும், ஜில்லுன்னு ஒரு காதல் சில்லுன்னு ஒரு காதல் எனவும் மாற்றப்பட்டது. அந்த நேரம் எம்டன் மகன் படத்தின் பெயரையும் எம் மகன் என மாற்றினர். எம்டன் என்பது ஜெர்மன் போர் கப்பலின் பெயர். ஜெர்மன் பெயரை எப்படி தமிழ்ப்படுத்த முடியும்?
 

இப்போதுகூட மான் கராத்தேயில் இடம் பெற்றிருக்கும் கராத்தே தமிழ்ச் சொல் கிடையாது என வழக்கு தொடுத்துள்ளனர். கராத்தே, வாஷிங்டன், பீட்சா இவற்றையெல்லாம் எப்படி தமிழ்ப்படுத்த முடியும்? கராத்தேயையும், எம்டனையும் ஒத்துக் கொள்ளாதவர்கள் ரோமியோ ஜுலியட்டை மட்டும் விடுவார்களா?
ஓகே. அது அவர்கள் பிரச்சனை. ரோமியோ ஜுலியட்டை இயக்குகிறவர் எஸ்.ஜே.சூர்யா நடித்த கள்வனின் காதலியை தயாரித்தவர். அந்த நட்பில் எஸ்.ஜே.சூர்யா ரோமியோ ஜூலியட் பூஜையில் கலந்து கொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார்.
 
இதில் ஹன்சிகா, ஜெயம் ரவி நடிக்கின்றனர்.