தைப் பூசம் விழாவை இந்துக்கள் இரண்டு முக்கியமான காரணங்களுக்காக கொண்டாடுகிறார்கள். முதலாவதாக முருகப் பெருமான் தனது தாயிடம் இருந்து சக்தி வேலினைப் பெற்ற தினம் தை பூசம் ஆகும்.
இரண்டாவது காரணம் அன்றுதான் குகைப் போன்ற சிதம்பரம் ஆலயத்தில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் பண்டிதர்கள் இருந்த ஆலயத்தில் தனது ஆனந்த தாண்டவ நடனத்தின் மூலம் சிவபெருமான் நடராஜர் என்ற தனது தத்துவத்தை வெளிப்படுத்தினார்.
தைப் பூசம் என்பது முக்கியமாக முருகப் பெருமானை சார்ந்த விழா என்றாலும், அந்த விழாவினை சிவன் மற்றும் முருகன் ஆலயங்களில் பெருமளவில் கொண்டாடுகிறார்கள்.
முருகப் பெருமான் தாயாரிடம் இருந்து வேலை பெற்ற நிகழ்வு தூய்மையைக் குறிப்பதாக உள்ளது. வரலாற்றின்படி தேவலோகம் மற்றும் பூமியில் இருந்தவர்களை துன்புறுத்தி வந்திருந்த - சூரபத்மன், சிம்மமுகன் மற்றும் தாரகாசுரன் என்ற மூன்று அசுரர்களை அழிப்பதற்காகவே அவருக்கு அந்த வேல் எனும் ஆயுதம் தரப்பட்டது.
அந்த மூன்று அசுரர்களும் பயம், வெறுப்பு, பொறாமை மற்றும் தலைகனத்தை குறிப்பவை. ஒளி மற்றும் ஞானம் என்பதைக் குறிக்கும் அந்த வேலினை கையில் ஏந்திக் கொண்ட முருகன் உலகில் அஞ்ஞானத்தில் உழன்று கொண்டுள்ளவர்களது அறியாமையை விலக்கி அவர்களுக்கு அமைதியை தந்தார். இப்படியாக மனத் தூய்மையைத் தரும் முருகனின் வேலின் சிறப்பை கூறும் தினமாகவே தைபூசம் கொண்டாடப்படுகிறது. தை பூச தினத்தில் முருகனை வழிபட்டு, பக்தர்கள் காவடி எடுத்தும் அந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.