ராகு & கேது பெயர்ச்சி பலன்கள் - கடகம்!

Webdunia
வெள்ளி, 28 ஜூலை 2017 (12:34 IST)
எதையும் திருத்தமாக செய்பவர்களே! உங்களுக்கு இந்த ராகுவும், கேதுவும் இணைந்து 27.7.2017 முதல் 13.02.2019 வரை உள்ள  காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப்போகிறார் என்பதை பார்ப்போம்.
 
இராகுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டில் அமர்ந்துக் கொண்டு நீங்கள் யதார்த்தமாகப் பேசுவதைக் கூட சிலர் தவறாக  புரிந்துக் கொண்டு உங்களை விட்டு விலகினார்களே! சொன்ன சொல்லையும் காப்பாற்ற முடியாமல் திணறினீர்களே! ஒருபக்கம்  பணவரவு இருந்தாலும் பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதே! குடும்பத்திலும் ஒரு  பிரச்னை முடிந்தது என்று ஆறுதலாக இருக்கும் நேரத்தில் புதிதாக வேறு ஒரு சிக்கலை உருவாக்கினாரே! அப்படிப்படட  ராகுபகவான் இப்போது உங்களது ஜென்ம ராசியிலேயே வந்தமர்வதால் இனி அனுபவப் பூர்வமாகப் பேசி எல்லோர் மனதிலும்  இடம் பிடிப்பீர்கள். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும்.  குடும்பத்திலும் கலகலப்பான சூழ்நிலை உண்டாகும். ஆனால் உங்கள் ராசியிலேயே ராகு நுழைவதால் உடல் நலத்தில் கூடுதல்  கவனம் செலுத்தப்பாருங்கள். தினமும் காலையிலும், மாலையிலும் நடைப்பயிற்சி, சின்ன சின்ன உடற்பயிற்சி மேற்கொள்வது  நல்லது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரி பார்த்துக் கொள்ளுங்கள். உடம்பில் இரும்புச் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து  குறைய வாய்ப்பிருக்கிறது. எனவே பச்சை காய், கீரை மற்றும் கனி வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். துரித  உணவுகளை அரவே தவிர்த்துவிடுவது நல்லது. நாக்கை கட்டுங்க. மருத்துவரிடம் பரிசோனை செய்யாமல் நீங்களாகவே எந்த  மருந்து, மாத்திரையும் உட்கொள்ள வேண்டாம். மனசு ஒத்துழைக்கும் போது உடம்பு மறுக்கிறது. கை, கால் மரத்துப் போகுதல்,  நரம்புத் தளர்ச்சி வரக்கூடும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள். என்ன வாழ்க்கை இது? செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி  என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்துப் போகும். சில நேரங்களில் எதையோ இழந்ததைப் போல  மனவாட்டத்துடன் காணப்படுவீர்கள். யாரேனும் உங்களைப் பற்றி விமர்சித்தால் அதைப் பற்றி கவலைப்பட்டுக்  கொண்டிருக்காதீர்கள். "காய்த்த மரம் தான் கல்லடிப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்". அதேப் போல நெருங்கிய நண்பர்கள்,  உறவினர்களாக இருந்தாலும் இடைவெளி விட்டு பழகுவது நல்லது. அவர்களை நம்பி பெரிய முடிவுகளெல்லாம் எடுக்க  வேண்டாம். உடம்பை குறைப்பதற்காக, முக வசீகரத்துக்காக என்றெல்லாம் கண்டபடி மருந்து, கிரீம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.  அலர்ஜி ஏற்படும். ரிசர்வு வங்கியின் அனுமதிப் பெறாத ஃபைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்ய வேண்டாம். வட்டிக்கு  ஆசைப்பட்டு இருப்பதை இழந்துவிடாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்கப்பாருங்கள். நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் சிலர்  உங்களுக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது. பணம் கொடுக்கல், வாங்கல் விஷயத்தில் சட்டப்படி ஆவணங்களையெல்லாம்  தயாரித்து வழக்கறிஞர் மூலமாக இறங்குவது நல்லது. வெற்றுத் தாளில் கையப்பமிட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பிள்ளைகளிடம்  உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம்.
 
இராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
உங்களின் விரையாதிபதியும்&திருதியாதிபதியுமான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் 27.7.2017 முதல் 4.4.2018 வரை  ராகுபகவான் செல்வதால் சோம்பல் நீங்கி உற்சாகமடைவீர்கள். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம்  கிடைக்கும். கோவில் திருவிழாவில் முதல் மரியாதைக் கிடைக்கும். மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். புது வீடு, மனை  வாங்குவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். சுற்றுலா சென்று வருவீர்கள். இளைய சகோதரங்கள் உதவுவார்கள். தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.
 
5.4.2018 முதல் 10.12.2018 வரை ராகுபகவான் உங்களின் சப்தம&அஷ்டமாதிபதியான சனிபகவானின் பூசம் நட்சத்திரத்தில்  செல்வதால் எதிர்மறை சிந்தனை, சிறுசிறு விபத்துகள், வீண் டென்ஷன், சச்சரவு, இரத்தத்தில் ஹீமோகுளோபின்  குறைபாடுகளெல்லாம் வந்துப் போகும். மனைவியை சந்தேகப்படாதீர்கள். மனைவிவழி உறவினர்களை அனுசரித்துப் போங்கள்.  சிலரின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். கொழுப்புச் சத்துள்ள உணவுகள் மற்றும் எண்ணெய் பதார்த்தங்களை  தவிர்க்கப்பாருங்கள். இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வரும்.
  
உங்களின் சஷ்டம&பாக்யாதிபதியான குருபகவானின் புனர்பூசம் நட்சத்திரம் 4&ம் பாதம் கடக ராசியில் 11.12.2018 முதல் 13.2.2019  முடிய ராகுபகவான் பயணிப்பதால் உங்களின் நீண்ட நாள் கனவுகளெல்லாம் நனவாகும். புது வீடு கட்டி கிரகப் பிரவேசம்  செய்வீர்கள். வி.ஐ.பியின் நட்பு கிட்டும். புது வாகனம் வாங்குவீர்கள். மகனுக்கு அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில்  வேலைக் கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிதுர்வழி  சொத்துகளை பெறுவதில் இருந்த சிக்கல்கள் விலகும். செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தந்தையாரின்  உடல் நலம் சீராகும்.
கன்னிப் பெண்களே! ஸ்கின் அலர்ஜி, முடி உதிர்தல் வந்துப் போகும். வாட்ஸ் அப், ஃபேஸ் புக், டிவிட்டரில் முன்பின்  தெரியாதவர்களிடம் சொந்த விஷயங்களையெல்லாம் பகிர்ந்துக் கொள்ளாதீர்கள். நண்பர்களிடம் உயர்கல்வி சம்பந்தமான  விஷயங்களை விவாதிப்பதுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். கல்யாணம் தள்ளிப் போகும். போட்டித் தேர்வுகளில் சற்றே  பின்னடைவு ஏற்படும். எந்த விஷயமாக இருந்தாலும் பெற்றோருடன் இல்லையென்றாலும் சகோதரங்களுடன் பகிர்ந்துக்  கொள்வது நல்லது.
 
மாணவ&மாணவிகளே! அலைப்பேசியை அதிகம் பயன்படுத்த வேண்டாம். வகுப்பறையில் கடைசி வரிசையில் அமர வேண்டாம்.  உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். ஒருமுறை படித்துவிட்டால் எல்லாம் மனசில் தங்கிவிடும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். எல்லாம் நன்றாக புரிவதுப் போல இருக்கும் ஆனால் தேர்வறையில் விடையை நினைவுக்கூறும்  போது திணறுவீர்கள். அதனால் விடைகளை ஒருமுறைக்கு இருமுறை சொல்லிப் பார்ப்பது, எழுதிப் பார்ப்பது நல்லது. ஆய்வகப்  பரிசோதனையின் போது கண்ணிலோ, கையிலோ ஆசிட் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளை ரகசியமாக வையுங்கள். எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். சிலர்  உங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்பிருக்கிறது.
அரசியல்வாதிகளே! நீங்கள் எதை செய்தாலும், எதை சொன்னாலும் அதில் குற்றம் கண்டு பிடிக்க சிலர் முயல்வார்கள்.  தலைமையின் நம்பிக்கையைப் பெற போராட வேண்டி வரும். சகாக்களிடம் உரிமையாகப் பேசி பெயரைக் கெடுத்துக்  கொள்ளாதீர்கள்.
 
வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். காலையில் வியாபாரம் நன்றாக இருந்தால் மாலையில் சுமாராக  இருக்கும். மாலையில் நன்றாக இருந்தால் காலையில் சுமாராக போகும். முக்கிய வேலைகள் இருக்கும் நாளில் வேலையாள்  விடுப்பிலே செல்வார். அதனால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம்  ஏற்படும். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். அனுபவமில்லாத  தொழிலில் முதலீடு போட்டு சிக்கிக் கொள்ளாதீர்கள். பெட்ரோ&கெமிக்கல், பதிப்பகம், ஸ்டேஷனரி, கண்சல்டன்சி வகைகளால்  லாபமடைவீர்கள். யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்களில் சிலர் தங்களது பங்கைக் கேட்டு தொந்தரவு  தருவார்கள்.
 
உத்யோகத்தில் எதிர்ப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் சின்ன சின்ன மோதல்கள் வரும். நியாயத்தை  எடுத்துச் சொல்லப் போய் உங்கள் பெயர் கெட வாய்ப்பிருக்கிறது. எனவே இடம், பொருள், ஏவல் அறிந்து உங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. சக ஊழியர்களில் இடமாற்றங்களை சந்திக்க வேண்டி வரும். சிலர் அடிப்படை உரிமை வேண்டி  நீதிமன்றம் செல்ல வேண்டி வரும். இடமாற்றம், முகவரி இல்லாத குற்றச்சாட்டு கடிதங்களின் அடிப்படையில் சின்ன சின்ன  விசாரணைகளை சந்திக்க வேண்டிய சூழல் வரும்.
 
கேதுவின் பலன்கள்:
 
இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு பலவிதமான இன்னல்களையும், அவஸ்தைகளையும் கொடுத்து வந்த  கேது இப்பொழுது ராசிக்கு ஏழாம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி ஏமாற்றம், குழப்பங்களிலிருந்து மீள்வீர்கள். உங்கள் ஆழ்மனதில் இருந்து வந்த அச்சம் விலகும். எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் நூலிழையில் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.  கணவன்&மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரும். பிரிவு ஏற்படக்கூடும். முடிந்த வரை சகிப்புத்தன்மையுடனும்,  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையுடனும் நடந்துக் கொண்டால் நல்லது. மனைவி ஏதேனும் குறைக் கூறினாலும் அதை  அப்படியே மறந்து விடுவது நல்லது. நீ இப்படி பேசுவதற்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லையே. உன்னை  யாரோ தூண்டி விடுகிறார்கள் என்றெல்லாம் மனைவியுடன் எதிர்வாதம் செய்துக் கொண்டிருக்க வேண்டாம். பிள்ளைகளின்  முன்னிலையில் மனைவியை குறைவாகப் பேச வேண்டாம். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் இல்லாமல் போகும்.  அரசாங்க விஷயம் தள்ளிப் போய் முடியும். தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். பிரபலங்களின்  நட்பை சரியாக பயன்படுத்தி முன்னேறப்பாருங்கள். பழைய இழப்புகள், ஏமாற்றங்களை அசைப் போட்டு தூக்கத்தை கெடுத்துக்  கொள்ள வேண்டாம். திருமண முயற்சிகள் தாமதமாகி முடியும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள்.  காலமெல்லாம் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியது தானா, மகிழ்ச்சியே வாழ்க்கையில் இருக்காதா என்றெல்லாம் புலம்புவீர்கள். நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள். உறவினர், நண்பர்களிடம் அதிக உரிமை  எடுத்துக் கொள்ள வேண்டாம். அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்காதீர்கள். சிறுசிறு விபத்துகள் நிகழக்கூடும்.  அரசுக்கு முரணான விஷயங்களில் தலையிடாதீர்கள். பழைய கடனை சமாளிக்க முடியாமல் திணறுவீர்கள். மாதம் தவறாமல்  அசலை செலுத்தினாலும் வட்டிக் கூடிக் கொண்டேப் போகிறதே என்று அச்சப்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.
 
கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
 
27.7.2017 முதல் 29.11.2017 வரை உங்களின் ஜீவனாதிபதியும்&பூர்வ புண்யாதிபதியுமான செவ்வாயின் அவிட்டம் நட்சத்திரம் 1, 2&ம்  பாதம் மகர ராசியில் கேதுபகவான் செல்வதால் இக்காலக்கட்டங்களில் புதிய திட்டங்கள் நிறைவேறும். மழலை பாக்யம்  கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே! நல்ல பதில் வரும். புது பொறுப்புகளுக்கு உங்களது பெயர் பரிந்துரை செய்யப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்து வாங்குவது, விற்பது  லாபகரமாக முடியும். வழக்கு சாதகமாகும்.
 
உங்களின் ராசியாதிபதியான சந்திரனின் திருவோணம் நட்சத்திரத்தில் 30.11.2017 முதல் 06.08.2018 வரை கேது செல்வதால்   உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். திருமணம், சீமந்தம், கிரகப்  பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். சொந்த&பந்தங்களால் ஆதாயமடைவீர்கள். பசியின்மை, சளித்  தொந்தரவு, கழுத்து வலி, மூட்டு வலி வந்து நீங்கும். சிலர் அயல்நாடு செல்வீர்கள்.
 
7.08.2018 முதல் 13.2.2019 வரை உங்களின் தனாதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் 2, 3, 4&ம் பாதம் மகர ராசியில் கேது  செல்வதால் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். அவசர முடிவுகள் வேண்டாமே. மற்றவர்களுக்காக சாட்சி கையப்பமிட வேண்டாம். வேற்றுமொழிக்காரர்களால் பயனடைவீர்கள். ஷேர் லாபம் தரும்.
 
வியாபாரத்தில் போட்டிகள் இருந்துக் கொண்டேயிருக்கும். வேலையாட்களிடம் வியாபார ரகசியங்களை பகிர்ந்துக்  கொள்ளாதீர்கள். கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். அரசு சம்பந்தப்பட்ட டென்டர்கள், கான்ட்ராக் விஷயத்தில் கவனமாக  செயல்படுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலட்சியப் போக்கை மாற்றிக் கொள்வது  நல்லது.
 
சக ஊழியர்களில் ஒருசிலர் அவர்களின் வீழ்ச்சிக்கு நீங்கள் காரணம் என்று தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். உங்களுக்கு  இருக்கும் மூத்த அதிகாரிகளின் நெருக்கம் சிலரின் கண்ணை உருத்தும்.
 
இந்த இராகு&கேது மாற்றம் கொஞ்சம் ஆரோக்ய குறைவையும், நிம்மதியின்மையையும் தந்தாலும் உங்களைச்  சுற்றியிருப்பவர்களின் உண்மை தன்மையைப் புரிய வைப்பதாக அமையும்.
 
பரிகாரம்:
 
நெல்லை மாவட்டம் திருக்குளந்தை அருகிலுள்ள மங்களக்குறிச்சியிலுள்ள (திருத்தொலை வில்லி மங்கலம்) ஸ்ரீபெரியப்  பிராட்டியார், பூமாதேவி உடனுறை ஸ்ரீஸ்ரீனிவாசப் பெருமாளை வணங்குங்கள். அகதிகளுக்கு உதவுங்கள்.
 
-கே.பி. வித்யாதரன்
அடுத்த கட்டுரையில்