ஆறு ஆதார சக்கரங்களில் இரண்டாவது சக்கரம் என்ன...?

Webdunia
சுவாதிஷ்டானம் என்றால், 'தன் சொந்த ஸ்தானம் (இடம்)' என்று பொருள். மனம், அடங்கி தன் சொந்த (சலனமற்ற) நிலைக்குத் திரும்புதல், குண்டலினி சக்தி,  ஸ்வாதிஷ்டானத்தை அடையும் போது நிகழும். மனமானது, காமம், குரோதம் முதலிய உணர்ச்சிகளிலிருந்து விலகி, செய்கைகளற்ற அமைதியான நிலையை  அடையும் இடம் ஸ்வாதிஷ்டானம்.

சுவாதிஷ்டானச் சக்கரம் இருக்கும் இடம்: மூலாதாரத்திற்கு மேல், சரியாக இரண்டு விரற்கடை தூரத்தில் இருப்பது தான் சுவாதிஷ்டானச் சக்கரம்.
 
இது ,நாற்சதுரத்தின் நடுவே ஆறு இதழ் கொண்ட ஆரஞ்சு நிறத் தாமரை மலர் வடிவமானது. மத்தியில், சாம்பல் நிறமுடைய பிறைச்சந்திரனை உள்ளடக்கியது.இந்த ஆறு இதழ்களும், ஆறு யோக நாடிகளைக் குறிக்கும். அந்த நாடிகளின் சப்த பரிமாணம், ஸ, ஹ, ம், ய, ர, ல எனும் ஆறு எழுத்துக்களால் குறிக்கப்படுகிறது.
 
இதன் பீஜ மந்திரம் 'வங்' ஆகும்.ஒரு குருவின் மூலம், முறையான பயிற்சி பெற்று, பீஜ மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது, குண்டலினி சக்தி, இந்தச் சக்கரத்தை வந்தடையும்.
 
இதன் நடுவில் உள்ள லிங்க பீடத்தில், பஞ்சாட்சர மந்திரமான, 'நமசிவாய' என்பதில் உள்ள 'ந' எனும் எழுத்தின் தத்துவம் விளங்குவதாகக் கூறப்படுகிறது.  ஒவ்வொரு ஆதாரச் சக்கரங்களும் சிவன் அம்சம். சக்தி ரூபமாகிய குண்டலினி ஒவ்வொரு சக்கரத்தையும் வந்து அடையும் போது, அந்தச் சக்கரம் மலருகிறது.
 
சுவாதிஷ்டானச் சக்கரம் மலரும்போது, சுயகட்டுப்பாடு, நுண்ணுணர்வு,முதலியவை அதிகரிக்கும். உணர்ச்சிகளுக்கு ஆதாரம் இந்தச் சக்கரம். அம்பிகை, கிரியாசக்தி  ரூபிணியாக இதில் வாசம் செய்கிறாள்.
 
இதன் அதிதேவதை: ஸ்ரீவிஷ்ணு பகவானும், காகினி தேவியும் ஆவார்கள். இந்தச் சக்கரத்துடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகள் கர்ப்பப்பை, பிறப்புறுப்புகள்,  பெருங்குடல், என்டொக்ரான் சுரப்பி முதலியன.
 
சுவாதிஷ்டானச் சக்கரத்திற்கு 'நிராகுலம்' என்றொரு பெயரும் உண்டு. ஆகுலம் என்றால் 'கவலை' . நிராகுலம் என்றால் கவலையின்றி இருத்தல். இந்தச் சக்கரத்தை  குண்டலினி அடையும்போது, நோய்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும், கவலைகளிலிருந்தும் (நோய்களும் துன்பங்களும் இல்லாவிட்டால் கவலை ஏது?) ,விடுபடுதல்  கிட்டும்.
 
சிவயோக நெறியில், சுவாதிஷ்டானச் சக்கரத்திற்குரிய திருத்தலம், திருவானைக்காவல். இது பஞ்சபூத ஸ்தலங்களுள் 'நீர்' ஸ்தலமாக விளங்குகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்