வள்ளலாரின் உயர்ந்த சிந்தனைகளில் சிலவற்றை பார்ப்போம்...!!

Webdunia
மிக கடுமையான தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு. அன்னதானம் ஒருவரின் பசியைப் போக்குவது எவ்வளவு புண்ணியம் வாய்ந்த செயல் என்று வள்ளலார் கூறியுள்ளார்.

அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்.
 
பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது.
 
பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம்  தழைக்கத் துவங்கும்.
 
பசி என்பது ஏழைகளின் உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல்  பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.
 
பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்.
 
உண்மையான அன்புடன் ஒளிவடிவில் அவரை வழிபாடு செய்ய வேண்டும். தெய்வ வழிபாட்டில் ஜீவ இம்சைக்கோ, உயிர்ப்பலிக்கோ சிறிதும் இடம் இல்லை. அன்பு  நெறியில் அமையும் வழிபாடே உயர்ந்த வழிபாடாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்