நவராத்திரி பண்டிகையின்போது எத்தனை படிகள் வைக்கவேண்டும் ஏன்...?

Webdunia
நவராத்திரி பண்டிகை ஆண்டுதோறும் இந்தியாவில் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களில் பக்தர்கள் துர்கா தேவியின் ஒன்பது வடிவங்களை வணங்குவார்கள். 

இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, நாளை முதல் 07.10.2021 துவங்கி 15.10.2021 அன்று வரை நடைபெற உள்ளது. நவராத்திரி விழாவையொட்டி கோவில்கள் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தப்படும்.
 
தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், சொர்க்கம், வீடுபேறு அடைதல் என்ற அனைத்தையும் தரக்கூடிய விரதமாக நவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. 
 
ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. அனைத்து உயிர்களிலும், பொருட்களிலும் அவளைக் காணவேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
 
முதல் படி, அதாவது கீழ் படியில் - ஓரறிவு உடைய உயிரினமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள். இரண்டாம் படியில் - இரண்டறிவு உடைய நத்தை, சங்கு பொம்மைகள்.
 
மூன்றாம் படியில் - மூன்றறிவு உடைய கரையான், எறும்பு பொம்மைகள். நான்காவது படியில் - நான்கு அறிவு உடைய நண்டு, வண்டு பொம்மைகள்.
 
ஐந்தாம் படியில் - ஐந்து அறிவு கொண்ட நான்குகால் விலங்குகள், பறவைகளின் பொம்மைகள். ஆறாம் படியில் - ஆறறிவு உடைய மனிதர்களின் பொம்மைகள்.
 
ஏழாம் படியில் - சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள். எட்டாம் படியில் - தேவர்களின் உருவங்கள், நவகிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள்.
 
ஒன்பதாம் படியில் - பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.
 
கொலு வைக்க சிறந்த நேரமாக காலை - 10.45 மணி முதல் 11.45 மணி வரை, மாலை - 06.30 மணி முதல் 07.30 மணி வரையாகும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்