மாசி மகம் எந்த தெய்வத்தை வழிபட உகந்தது தெரியுமா...?

Webdunia
மாசி மகம் நட்சத்திரத்தன்று தான் பார்வதிதேவி பிறந்ததாக புராணக் குறிப்புகள் கூறுகின்றன. பார்வதி தேவியை மகளாக பெற வேண்டி கடும் தவம் புரிந்த தக்கனின் மகளாக பிறந்த ‘தாட்சாயினி’ பி‌றந்த தினம் மாசி மகம். 

சக்தியையும், சிவனையும் வணங்க சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். ஒருமுறை வருண பகவானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இதனால் அவர் கட்டுண்ட நிலையில் கடலில் வீசப்பட்டார். எனவே மழையில்லாமல் வறட்சியும், பஞ்சமும் நிலவியது. அனைத்து உயிர்களும் பசியால் வாடியது. 
 
வருண பகவான் நீருக்குள் மூழ்கியபடி சிவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். எனவே வருண பகவானை விடுவிக்கக்கோரி தேவர்கள் சிவபெருமானிடம்  முறையிட, சிவபெருமானும் அவரை விடுவித்தார். இந்நிகழ்வு நடைபெற்றது மாசிமகம் அன்று தான்.
 
இந்நாள் ‘தீர்த்தமாடும் நாள்’ என்றும் ஆனது. அதாவது இந்த நாளில் கடல், ஆறு, குளம் போன்ற ஓடும் நீர் நிலைகளில் நீராடுவது சகல தோஷங்களையும்  போக்கவல்லது. செய்த பாவங்களுக்கு பாவ விமோசனம் பெற, மாசி மகம் அன்று புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவதும், புனித நீராடல் புரிவதும் நன்மைகளை அளிக்கும். மேலும் பித்ருக்களுக்கு உகந்ததாக இருப்பதால், நதி, கடல் போன்ற நீர்நிலைகளில் பித்ரு தர்ப்பணம் செய்வது முன்னோர்களின் ஆசி  கிடைக்க செய்யும். 
 
ஞானமும், முக்தியும் அளிக்கும் கேது பகவான் மகம் நட்சத்திரத்திற்கு அதிபதியாவார். எனவே இந்நாளில் கேது பகவானை வழிபட அறிவாற்றல் சிறக்கும் என்பதால்  குழந்தைகளும், பெரியவர்களும் நவகிரக சந்நிதியில் இருக்கும் கேது பகவானுக்கு வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்யலாம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்