முருகப்பெருமானுக்கு உகந்த விரதங்களும் வழிபாட்டு பலன்களும் !!

Webdunia
செவ்வாய், 31 மே 2022 (18:53 IST)
முருகப்பெருமானுக்கு பொதுவாக மாதந்தோறும் 3 விரதங்கள் கடைபிடிக்கப்படும். முதலாவதாக வார விரதமான செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபாடு செய்வது. இரண்டாவதாக நட்சத்திர விரதம் என்று சொல்லப்படும் கிருத்திகை விரதம். மூன்றாவதாக திதி விரதம் என்று சொல்லப்படும் சஷ்டி விரதம்.


சஷ்டி விரதம்:  வாழ்க்கையில் நமக்கு எந்த துன்பம் வந்தாலும் சரி, அந்த துன்பத்தில் இருந்து வெளிவருவதற்கு தேவையான மன தைரியத்தை கொடுக்கக்கூடிய வழிபாடுதான் முருகப்பெருமானின் வழிபாடு. விதியை மாற்றக்கூடிய சக்தி சஷ்டி வழிபாட்டிற்கு இருக்கின்றது.

உங்களுக்கு திருமணம் நடக்கவில்லையா, ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய சஷ்டி திதி அன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முல்லைப் பூ அல்லது செவ்வரளி பூ மாலை சூட்டி, 2 நெய் தீபங்களை ஏற்றி முருகப்பெருமானை வழிபாடு செய்துவர நல்ல மணவாழ்க்கை அமையும். இதேபோல திருமணமான தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்றாலும் இந்த சஷ்டி விரதத்தை மேற்கொள்ளலாம்.

கிருத்திகை விரதம்:  வாழ்வில் நமக்கு விதிக்கப்பட்ட வினையெல்லாம் தீர வேண்டுமென்றால் முருகப்பெருமானின் கிருத்திகை நட்சத்திர விரதத்தை மேற்கொள்ள வேண்டும். இன்னல்கள் இல்லாத இனிமையான வாழ்க்கை அமைய முருகப்பெருமானின் கிருத்திகை விரதம் நமக்கு கைகொடுக்கும்.

செவ்வாய் விரதம்: வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்துவர வாழ்வில் இருக்கக்கூடிய அத்தனை தடைகளும் விலகும். குறிப்பாக ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களால் வாழ்க்கையில் முன்னேற தடை ஏற்பட்டால் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாடு மிக மிக உகந்தது.

வாரம்தோறும் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று வீட்டில் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு செவ்வரளி பூக்களால் அலங்காரம் செய்து, 6 நெய் தீபங்கள் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டால் சுபிட்சம் கிடைக்கும்.

இன்று இந்த மூன்று விஷேசங்களும் ஒருசேர வருவது மிகவும் சிறப்பு. இந்த அற்புதமான நாளில் முருகப்பெருமானை மனதார வழிபட்டால், வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்களையும் நீக்கி, சகல சௌபாக்கிங்களையும் தந்தருள்வார் முருகப்பெருமான்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்