விநாயகர் பற்றி பலரும் அறிந்திடாத தகவல்கள் பற்றி பார்ப்போம்!!

Webdunia
வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.
அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.
 
‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.
 
கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம்  தலைவன் எனப்பொருள் படுகிறது.
 
விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.
 
விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.
தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.
 
நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்)  திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.
 
மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய  திருநாமம் மயூரேசர்.
 
யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்