அற்புதங்கள் நிறைந்த சீரடி சாயி பாபாவின் மகிமைகள்

Webdunia
சீரடி சாய்பாபாவை இந்துக்களும் இசுலாமியரும் புனித சாமியாராக போற்றுகின்றனர். இந்துக்கள் இவரை கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாகக் கருதுகின்றனர். இசுலாமியர் பிர் அல்லது குதுப் ஆக நம்புகின்றனர்.


 


சீரடியில் இவர் சமாதி அடைந்த இடம் தற்போது பல்லாயிரக்கணக்கானவர் தொழும் புண்ணியத் தலமாக விளங்குகிறது.
 
துவாரகாமாயீயில் பாபாவால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குண்டம் இன்றும் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அதில் விறகுக் கட்டைகளைப் போட்டு எரித்துக் கொண்டிருப்பார் பாபா. அதன் முன் அமர்ந்து தினமும் தியானம் செய்வது அவர் வழக்கம். தன் பக்தர்களுக்கு இந்த அக்னி குண்டத்திலிருந்து ’உதி’ என்று அழைக்கப்படும் விபூதியை எடுத்துத் தருவார். இந்த ’உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லாவித ஊழ் வினைகளையும், வியாதிகளையும், சகல பாவங்களையும் போக்கவல்லது.
 
பாபா தன் வாழ்நாளில் செய்த அற்புதங்களுக்கு அளவே இல்லை. காணாமல் போன குதிரையைக் கண்டுபிடித்தது எல்லாம் சர்வ சாதாரணம். இறந்தவரை உயிர் பிழைக்க வைத்தது. அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கியது, நோய் தீர்த்தது, திருடர்களிடமிருந்து காத்தது, ஒரே நேரத்தில் பல இடங்களில் இருந்தது என்று அவர் செய்த அற்புதங்கள் எண்ணற்றவை. இன்றும் அவர் ஆற்றிவரும் அற்புதங்களுக்குக் குறைவே இல்லை.
 
பாபாவின் சத்திய வாக்கு:
 
* எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.
 
* என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
 
* எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.
 
* எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.
 
* கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
 
* இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்