மகாசிவராத்திரி நான்கு கால பூஜைகளும், பூஜை செய்யும் முறையும்..!
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (09:52 IST)
மகாசிவராத்திரி அன்று சிவபெருமானுக்கு நடத்தப்படும் நான்கு கால பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. எந்தெந்த கால பூஜையில் எந்த பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் தெரியுமா?
சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சிவராத்திரி ஒன்று என்றால் சிவபெருமானின் பூரண ஆசியை பெற மகாசிவராத்திரி அனைத்திலும் முக்கியமான ஒன்று. தமிழ் மாதமான மாசி மாதத்தின் கிருஷ்ணபட்ச சதுர்த்தியில் அமாவாசைக்கு முதல் நாள் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த மகாசிவராத்திரி நாளில் சிவபெருமானை வணங்கி தொழுது தேவர்களுமே பயனடைந்தனர். முருகபெருமான், இந்திரன், சூரியன், குபேரர் உள்ளிட்ட சகல தேவர்களும், கடவுளர்களும் மகாசிவராத்திரியில் சிவனை பூஜித்து பலன் அடைந்தனர். ஸ்ரீமகாவிஷ்ணு மகாசிவராத்திரியில் விரதம் கடைபிடித்து சக்ராயுதத்தை பெற்றார் என்றும். ஸ்ரீ மகாலெட்சுமியை மனைவியாக அமைய பெற்றார் என்றும் புராணங்கள் சொல்கின்றன.
மகாசிவராத்திரியில் சிவபெருமானுக்கு செய்யப்படும் நான்கு கால பூஜைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒவ்வொரு கால பூஜையிலும் ஒவ்விரு பொருட்களால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடத்தப்படுகிறது.
முதல் கால பூஜை
விஷ்ணுவுக்கும், பிரம்மாவுக்கும் யார் பெரியவர் என்று ஏற்பட்ட மோதலில் எம்பெருமான் ஈசனின் தலை பகுதியை காண அன்னப்பறவையாய் மாறிய பிரம்மன் செய்த பூஜை முதல் கால பூஜையாகும்.
முப்பது முக்கோடி தேவர்களும், மும்மூர்த்திகளும், ரிஷிகளும் என சகலரையும் தன்னுள் அடக்கிய கோமாதாவிடம் இருந்து பெறும் அமுதுகளால் முதல் கால பூஜை அபிஷேகம் செய்யப்படுகிறது.
அதன்படி, பசும்பால், பசு தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றை கலந்து செய்யும் பஞ்ச கவ்யத்தால் முதல் அபிஷேகம் செய்யப்படுகிறது. பிறகு சந்தனம் பூசி, மஞ்சள் பொன்னாடை அணிவித்து, வில்வ அலங்காரம் செய்யப்படுகிறது. தாமரை பூ அர்ச்சனை செய்து, பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனமாக படைக்கப்படுகிறது. நெய் விளக்கேற்றி, சிவபுராண பாராயணம் பாடி முதல் கால பூஜை நடத்தப்படுகிறது. முதல் கால பூஜை பிறவி பிணி போக்கும் வல்லமை கொண்டது.
இரண்டாவது கால பூஜை
பிரம்மன் ஈசனின் தலை முடி காண சென்றபோது வராகமாய் மாறி சிவபெருமானின் அடி காண சென்ற மகாவிஷ்ணுவால் செய்யப்படும் பூஜை இரண்டாம் கால பூஜை.
பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து, பச்சை கற்பூரம், பன்னீர் கலந்து சாத்தப்படும். வெண்பட்டு ஆடை அலங்காரத்தில், வில்வம், துளசி அர்ச்சனை செய்து, இனிப்பு பாயாசம் நிவேதனமாக படைக்கப்படும். நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, கீர்த்தி திருவகவல் பாட வேண்டும். இரண்டாம் கால விரதம் மற்றும் பூஜை நோய்களை தீர்த்து, செல்வம் செழிக்க வழிவகுக்கும்.
மூன்றாம் கால பூஜை
ஈசன் தனது பாதியை பிரித்துக் கொடுத்த அம்பாள் பெருமான் ஈசனுக்கு செய்யும் பூஜை மூன்றாம் கால பூஜை.
தேனில் அபிஷேகம் செய்து, பச்சை கற்பூரம், மல்லிகை சார்த்தப்படும். சிவப்பு வஸ்திரமணிந்து, வில்வ இலை கொண்டு அர்ச்சனைகள் செய்யப்படும். எள் அன்னம் நிவேதனமாக படைக்கப்படும். நெய் தீபம் ஏற்றி திருவண்டகப்பகுதி பாராயணம் செய்ய வேண்டும். இந்த காலத்தில் விரதமிருப்பது எந்தவித தீயசக்தியும் அண்டாமல் இருக்க சக்தி அருளை அள்ளித்தரும்.
நான்காம் கால பூஜை
முப்பது முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், மனிதர்களும், விலங்குகளும் என ஏக சகல உயிர்களும் சிவபெருமானை பூஜிப்பதுதான் நான்காம் கால பூஜை
குங்குமப்பூ சாற்றப்பட்டு, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்யப்படும். பச்சை அல்லது நீல வண்ண அஸ்திரம் அணிவிக்கப்பட்டு நந்தியாவட்டை மலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. நீலோற்பவம் மலர்களால் அர்ச்சனை செய்து சுத்தன்னம் நிவேதமாக படைக்கப்படும்.
தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும்போது, போற்றி திருவகவல் பாராயணம் செய்து 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேகங்களை தரிசித்தால் காரிய சித்தி கிடைக்கும்.