கைது செய்யும் முன்பே தற்கொலைக்கு முயன்றதாக புகைப்படம் எடுத்தது யார்? - திருமாவளவன் கேள்வி

Webdunia
திங்கள், 19 செப்டம்பர் 2016 (23:29 IST)
ராம்குமார் கைது செய்யப்படுவதற்கு முன்பே தற்கொலைக்கு முயன்றார் என்கிற படக்காட்சிகள் வெளியானது. அந்த காட்சிகள் யார் எடுத்தது என்று என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
 

 
இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், ”ராம்குமாரின் மரணம் உண்மையிலேயே தற்கொலை தானா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவரது மரணத்திற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
 
சுவாதி கொலையை தான் செய்யவில்லை என்று ராம்குமார் கூறிவந்த நிலையில் தற்போது இந்த மரணம் நடந்துள்ளது. முன்னரே இவ்வழக்கு குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்டுள்ள நிலையில் இந்த மரணம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
சுவாதி கொலையில் பல்வேறு வதந்திகள் வந்துள்ளன. தற்போது இந்த மரணம் நிகழ்ந்திருக்கிறது. ராம்குமாரின் மரணம் குறித்த ஐயத்தை போக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசிற்கு உள்ளது. மேலும் ராம்குமாரை கைது செய்ய தொடக்கத்தில் இருந்தே காவல்துறை அணுகிய முறை, நடத்திய விதம் பல்வேறு சந்தேகத்தை கிளப்பியது.
 
அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பே தற்கொலைக்கு முயன்றார் என்கிற படக்காட்சிகள் வெளியானது. அந்த காட்சிகள் யார் எடுத்தது, தற்போது யாரிடம் உள்ளது என்கிற சந்தேகம் சமூக வலைத்தளத்தில் பரவியது. அதனை காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.
 
ஒருதலைக் காதல் மட்டுமே சுவாதி கொலைக்கு காரணமாக இருக்க முடியாது. ராம்குமாரின் மரணத்தில் வேறு பின்னணி உள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளதால் உடலை உடனடியாக அடக்கம் செய்து சம்பவத்தை மூடி மறைக்காமல் உரிய விசாரணை நடத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.
அடுத்த கட்டுரையில்