திருப்பூ அருகே தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றிய ரூ. 570 கோடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது குறித்து நான் தகவல் வெளிவந்த 28-5-2016 அன்றே விரிவாக அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இப்படித் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்படுவது இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று நாளேடுகள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகளின் போது பல்வேறு இடங்களில் 100 கோடி ரூபாய்க்கு மேல் தேர்தல் ஆணையத்தால் கைப்பற்றப்பட்டது. இந்த அளவுக்குக் கைப்பற்றப்பட்டது இதுவே முதல் முறை என்று அப்போதும் சொல்லப்பட்டது. ஆனால் இவ்வளவு பெரிய தொகை யார் யாரிடமிருந்து கைப்பற்றப்பட்டதோ அவர்கள் மீது தேர்தல் ஆணையம் சட்டப்படி எடுத்த நடவடிக்கை என்ன? பணம் வைத்திருந்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கையாவது பதிவு செய்யப்பட்டதா? பணம் வைத்திருந்தவர்கள் கைது செய்யப்பட்டார்களா? தகுந்த புலன் விசாரணைக்குப் பிறகு, உரிய நீதிமன்றத்திற்கு வழக்குகள் எடுத்துச் செல்லப்படுவதில் ஏன் இந்தத் தாமதம்?
அதிமுகவின் மூன்று அமைச்சர்களுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவர்களுக்கு எல்லாமுமாகச் செயல்பட்டவருமான கரூர் - அய்யம்பாளையம் அன்புநாதன் வீட்டிலிருந்தும், குடோனிலிருந்தும் தேர்தல் ஆணைய உத்தரவின்படி பல கோடி ரூபாய் மற்றும் வாகனங்கள், பணம் எண்ணும் இயந்திரங்கள், கண்காணிப்புக் காமரா போன்றவை கைப்பற்றப்பட்ட நிகழ்வில் இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது?
அதிமுகவின் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு நெருக்கமான ஒருவரின் சென்னை அடுக்கு மாடிக் குடியிருப்பிலிருந்து கோடிக்கணக்கான ரூபாயைத் தேர்தல் ஆணையம் கைப்பற்றியதே! அந்த நிகழ்வில் இதுவரை சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கை என்ன?
கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்பட்டு திருப்பூருக்கருகில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கைகளின் விபரங்கள் என்ன? இந்த விபரங்களையெல்லாம் வெளிப்படையாகத் தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டாமா? அமைச்சர்களைப் போன்ற “பெரிய இடங்கள்” சம்பந்தப்பட்டிருப்பதால், ஆறப் போட்டு மூடி மறைத்திட முயற்சிகள் நடப்பதாக விபரமறிந்தவர்கள் வேதனைப்படுகிறார்களே.
ரத்து செய்யப்பட்ட தேர்தலை மீண்டும் நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன், இந்த நிகழ்வுகளில் தேர்தல் ஆணையம் சட்டப்படி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விபரங்களை நாட்டு மக்களுக்கு ஒளிவு மறைவின்றிச் சொன்னால் தானே, அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் பெருமளவுக்கு நடந்த பண விநியோகம் தான் தேர்தலை ரத்து செய்யக் காரணம்; வேறு யாருக்கும் அனுசரணையாகவோ, உதவுவதற்கோ இந்த முடிவு மேற்கொள்ளப் படவில்லை; ஓட்டுக்குப் பணம் என்பதை எப்படியும் தடுத்தே தீருவோம்; என்பனவற்றின் மீது உண்மையில் எல்லோருக்கும் நம்பகத்தன்மை ஏற்பட முடியும். முதல் முறை - முதல் முறை என்று சொல்லிக் கொள்வதற்கும் அப்போதுதானே பொருள் இருக்கும் என கேள்வி எழுப்பியுள்ளார்.