எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

Senthil Velan
திங்கள், 23 செப்டம்பர் 2024 (16:07 IST)
இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பூம்புகார் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த திரு. செல்லத்துரை ஒரு சில நாட்களுக்கு முன் 37 மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதன் காரணமாக பூம்புகார் துறைமுகத்தில் மீனவர்கள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
 
தன் தந்தை நாணய வெளியீட்டு விழாவிற்கு உங்களின் ஒரு வார்த்தை அழைப்பை ஏற்று , மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் வந்தார் என்றும் ஒருவரின் மகிழ்ச்சிக்காக நடைபெற்ற கார்பந்தயத்திற்கு ஒரே நாளில் மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்றீர்கள் என்றும் எடப்பாடி தெரிவித்துள்ளார்
 
நடுகடலில் எழுதாத பேனாசிலை வைக்க மத்திய தடையில்லா சான்றிதழ் பெற்ற அதிகாரம் மிக்க நீங்கள், ஏன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிபடும்போதும், கொல்லப்படும்போதும், உளமார்ந்த உறுதியான நடவடிக்கை எடுக்காமல், பெயரளவிற்கு கடிதம் மட்டுமே எழுதுகின்றீர்கள்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
தமிழக மீனவர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசின் உறுதியான நடவடிக்கையை விடியா திமுக அரசால் நிர்ப்பந்தித்து பெறமுடியவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். தனக்கோ, தன்குடும்பத்திற்கோ தேவையென்றால், ஒரு நொடியில் சாதித்துக் கொள்ளும் மு.க ஸ்டாலின்,  தமிழக மீனவர்களுக்கோ, தமிழக நலனுக்கோ பாதிப்பு ஏற்படும்போது ஏனோதானோ என்று கடிதத்துடன் நிறுத்திக்கொள்கிறீர்கள் என்று எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.


ALSO READ: குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!
 
எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள் என்று அவர் காட்டமாக பதிவிட்டுள்ளார். இனியாவது விரைந்து செயல்பட்டு, மத்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து இலங்கை சிறையில் அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும் விடுவிக்க பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்