வெளியேறும் விஜயகாந்த்: மக்கள் நல கூட்டணி உடைகிறது?

Webdunia
செவ்வாய், 24 மே 2016 (11:33 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மிகப்பெரும் அடி வாங்கிய கட்சி தேமுதிக. தேர்தலுக்கு முன்பு தவிர்க்க முடியாத கட்சியாக இருந்த தேமுதிக. தேர்தலுக்கு பின் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து பரிதாபத்துக்குறிய நிலையில் உள்ளது.


 
 
இதனால் தேமுதிக தலைமை முதல் தொண்டர்கள் வரை அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினர். பின்னர் பேட்டியளித்த அவர்கள் உள்ளாட்சி தேர்தலிலும் மக்கள் நலக் கூட்டணி தொடரும் என அறிவித்தனர்.
 
இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர்களை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்துக்கு வரவழைத்து தோல்விக்கான காரணம் குறித்து ஆலோசித்துள்ளார் விஜயகாந்த். அவர்கள் அனைவரும் தவறான கூட்டணி அமைத்தது தான் காரணம் என கூறியதாக கூறப்படுகிறது.
 
இதனையடுத்து மக்கள் நல கூட்டணியில் தேமுதிக தொடர்ந்து நீடிப்பது குறித்து விஜயகாந்த் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் 10 மாவட்ட செயலாளர்கள் வீதம் வரவழைத்து விஜயகாந்த் பேசுவதாகவும் அவர்கள் அனைவரும் மக்கள் நல கூட்டணியில் தேமுதிக நீடிக்க கூடாது எனவே கூறுவதாக சொல்லப்படுகிறது.
 
இதனால் மக்கள் நல கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்கள் அச்சத்தில் உள்ளனர். மக்கள் நல கூட்டணி உடைந்து, தேமுதிக வெளியேறும் நிலை தற்போது உருவாகி உள்ளதாகவும், இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னரே உடையும் என தேமுதிக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.
அடுத்த கட்டுரையில்