தமிழக உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. கட்சிகளின் அடுத்த முக்கியமான இலக்கு உள்ளாட்சி தேர்தல். பிரதான கட்சிகள் பலவும் உள்ளாட்சி தேர்தலுக்கான கட்சி பணிகளை தொடங்கிவிட்டது.
கடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி உடன் சேர்ந்து படுதோல்வியடைந்த தேமுதிக தற்போது மோசமான சூழலில் உள்ளது. நிர்வாகிகள் வேறு கட்சிக்கு தொடர்ந்து தாவி வருகின்றனர். இதனை தடுக்க விஜயகாந்த் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பலர் மிகுந்த பண நெருக்கடியில் உள்ளனர். இதனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட யாரும் விருப்பம் காட்டவில்லை என பேசப்படுகிறது. கட்சி பணம் செலவழித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவோம் என பலர் கூறிவருகின்றனர்.
ஆனால், தொடர்ந்து கட்சியினர் வேறு கட்சிக்கு மாறி வருவதால், கட்சி சார்பில் பணம் செலவழித்து நிறுத்தி வெற்றி பெற்ற பின்னரோ அல்லது தேர்தலுக்கு முன்னதாகவோ கட்சியினர் விலை போய் விடுவார்களோ? என கட்சித் தலைமை அஞ்சுகிறதாக கூறப்படுகிறது.
இதனால் விஜயகாந்த் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.