வி.ஏ.ஓ.க்கள் இனி அலுவலகத்திலேயே தங்க வேண்டும் - ஆணையர் உத்தரவு

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2016 (09:58 IST)
கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணியாற்றும் இடங்களிலேயே கட்டாயம் தங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர் அதுல்ய மிஸ்ரா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
 

 
இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை, தங்களுக்கென உள்ள அரசு அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் [வி.ஏ.ஓ.] பணியாற்ற வேண்டும். வருகைப் பதிவேடு மற்றும் முகாம் பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.
 
அந்தப் பதிவேடுகளை வருவாய் ஆய்வாளர்கள் வாரத்துக்கு ஒருமுறை தணிக்கை செய்ய வேண்டும். அவை பின்னர் வட்டாட்சியர் [தாசில்தார்] வசம் அனுப்பப்பட வேண்டும்.
 
கூடுதல் பொறுப்பு, களப்பணி அல்லது வேறு அலுவல் ஆகியவற்றுக்காக அலுவலகத்தை விட்டுச் சென்றால், அதற்கான காரணம், திரும்பும் நேரம் ஆகியவற்றை அறிவிப்புப் பலகையில் மக்கள் பார்க்கும் வகையில் குறிப்பிட வேண்டும். அவரது செல்போன் எண் குறிப்பிடப்பட வேண்டும்.
 
வி.ஏ.ஓ. தான் நியமிக்கப்பட்டுள்ள கிராமத்தில் கட்டாயம் தங்கிப் பணியாற்ற வேண்டும். உயர் அதிகாரிகள் கேட்கும் தகவல்களைக் கொடுப்பதற்கு நேரில் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லை. கால விரயத்தை கருத்தில் கொண்டு இ-மெயிலை பயன்படுத்தலாம்.
 
இந்த சுற்றறிக்கையை நடைமுறைப்படுத்துவது பற்றி கண்காணிக்க வேண்டும். இதை பின்பற்றாவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்