தமிழக முதல்வரை இன்று சந்தித்த பிரதமர் மோடி ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் மத்திய அரசால் தற்போது அவசர சட்டம் கொண்டு வர முடியாது என நழுவிவிட்டார். இதனால் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
அவசர சட்டம் கொண்டுவந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், காளையை காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளுடன் தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் பற்றி எரிகிறது.
இந்நிலையில் போராட்டத்தின் தீவிரத்தன்மையை உணர்ந்த முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டக்காரர்களின் கோரிக்கையுடன் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது ஜல்லிக்கட்டுக்கு சாதகமான முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது விலகிக்கொண்டார்.
இதனால் தற்போது வரை ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. இதனால் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தங்களின் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் உட்பட அனைத்து எம்பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. நாங்க ஓட்டு போட்டு நீங்க ஆட்சிக்கு வந்தீங்க. எங்களுக்கு நல்லது செய்யாத நீங்க ராஜினாமா செய்யுங்க. இல்லையேல் ஆட்சியை கலைங்க என போராட்டத்தில் உள்ளவர்கள் கூற ஆரம்பித்துள்ளனர்.