ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழக வீரருக்கு முதல்வர் இரங்கல்

Webdunia
ஞாயிறு, 2 ஆகஸ்ட் 2020 (17:16 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்திய நாட்டின் எல்லையில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த தமிழகத்தைச் சேர்ந்த திருவாரூர் புள்ளவராயன்குடிக்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவர் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததால் காயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த மாதம் 31ம் தேதி அன்று உயிரிழந்தார்
 
இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில்‌ இந்திய நாட்டின்‌ எல்லை பாதுகாப்பு படையில்‌ பணியாற்றி வந்த, திருவாரூர்‌ மாவட்டம்‌, நீடாமங்கலம்‌ வட்டம்‌, புள்ளவவராயன்குடிக்காடு கிராமத்தைச்‌ சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை, 173-வது படைப்பிரிவைச்‌ சேர்ந்த ஹவில்தார்‌ திரு. திருமூர்த்தி த/பெ திரு.சக்திவேல்‌ என்பவர்‌ 25.7.2020 அன்று எதிர்பாராத விதமாக அவருடைய துப்பாக்கி வெடித்ததில்‌ பலத்த காயமடைந்து மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 31.7.2020 அன்று உயிரிழந்தார்‌ என்ற செய்தியை அறிந்து நான்‌ மிகுந்த துயரம்‌
அடைந்தேன்‌.
 
உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை ஹவில்தார்‌ திரு. திருமூர்த்தி அவர்களின்‌ குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்‌, அனுதாபத்தையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. மேலும்‌, ஹவில்தார்‌ திரு.திருமூர்த்தி அவர்களின்‌ குடும்பத்தினரை நேரில்‌ சந்தித்து ஆறுதல்‌ கூறவும்‌, தமிழ்நாடு அரசு சார்பில்‌ மரியாதை செலுத்தவும்‌, மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர்‌ திரு. காமராஜ்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ஆகியோருக்கு நான்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.
 
இந்த துயரச்‌ சம்பவத்தில்‌ உயிரிழந்த எல்லை பாதுகாப்புப்‌ படை ஹவில்தார்‌ திரு. திருமூர்த்தி அவர்களின்‌ குடும்பத்தில்‌ ஒருவருக்கு தகுதியின்‌ அடிப்படையில்‌ அரசுப்‌ பணி வழங்கவும்‌ நான்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.
 
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்