திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இன்று பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் திருப்பரங்குன்றத்தில் 800 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் முருகன் கோவில் அமைந்துள்ள நிலையில், மலை மீது சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்நிலையில் சமீபமாக தர்கா கந்தூரி விழாவில் ஆடு பலியிட தடை செய்யப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட சர்ச்சைகளால் அங்கு இந்து - இஸ்லாமியரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் மலை முழுவதுமாக இந்துக்களுக்கே சொந்தம் என இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்புகள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை மீட்போம் என முழங்கி இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் இன்று திருப்பரங்குன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டன. அதை தொடர்ந்து நேற்று முதலாக மதுரையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போராட்டம் நடத்த திட்டமிட்ட இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பின் நிர்வாகிகள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு திருமண மண்டபங்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். பொது மக்கள் யாரும் இதுபோன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என மதுரை மாநகர காவல் நிலையம் அறிவித்துள்ளது.
இன்று அசாதாரண சூழல் நிலவுவதால் பாதுகாப்பு கருதி திருப்பரங்குன்றத்தில் 800+ போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மலை மேலே உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கும், சிக்கந்தர் தர்காவுக்கும் செல்லும் பாதைகள் மூடப்பட்டுள்ளன. இன்று ஒருநாள் மட்டும் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் முருகன் கோவிலில் பக்தர்கள் வழிபட தடையில்லை என்றாலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Edit by Prasanth.K